பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட அவசரகால சட்ட பிரகடனம் பாராளுமன்றத்தில் 56 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 120 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன், எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன. நேற்று புதன்கிழமை முற்பகல் 10 மணிக்கு பாராளுமன்றம் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய நிலையில், சபை முதல்வர் சுசில் பிரேமஜயந் தவினால் பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பதில் ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அவசரகால சட்ட பிரகடனம் தொடர்பான தீர்மானம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் ஆரம்பிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மாலை 5.20 மணி வரை இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதுடன், விவாதம் முடிவடைந்ததும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லஷ்மன் கிரியல்லவினால் வாக்கெடுப்புக் கோரப்பட்டமைக்கு அமைய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்போது ஆளும் தரப்பிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் அதனை ஆதரித்து வாக்களித்ததுடன், அந்தக் கட்சியின் தவிசாளரான ஜீ.எல்.பீரிஸ் மற்றும் டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட குழுவினர் அதனை எதிர்த்து வாக்களித்தனர்.
இதேவேளை எதிர்க்கட்சி தரப்பில் சுயாதீனமாக செயற்படும் விமல் வீரவன்ச அணியை சேர்ந்த பெரும் பான்மையான உறுப்பினர்கள் அதனை ஆதரித்து வாக்களித்த அதேவேளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எம்.பி.க்கள் இருவரும் ஆதரவாகவே வாக்களித்தனர்,சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அதன் பங்காளிக் கட்சிகளை சேர்ந்தோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய முன்னணி, ஜே.வி.பி ஆகிய கட்சிகள் எதிராக வாக்குகளை பதிவு செய்தன. எனினும் வாக்களிப்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட எதிர்க்கட்சி தரப்பில் செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை.