அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இலங்கை ஆறுதல் வெற்றி

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான ரி-20 போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை ஆறுதல் வெற்றியை பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தசுன் ஷாக்க தலைமையிலான இலங்கை அணியானது அவுஸ்திரேலியாவுடன் ஐந்து போட்டிகள் கொண்ட T-20 தொடரில் விளையாடி வந்தது.


முதல் நான்கு ஆட்டங்களிலும் அவுஸ்திரேலியா வெற்றி பெற்று 4:0 என்ற கணக்கில் தொடரை வென்றிருந்த நிலையில் ஐந்தாவதும், இறுதியுமான போட்டி நேற்று மெல்போர்னில் ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ஓட்டங்களை குவித்தது. துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலியா சார்பில் அதிகபடியாக மேத்யூ வேட் 43 (27) ஓட்டங்களையும், மேக்ஸ்வெல் 29(21) ஓட்டங் களையும் பெற்றனர். பந்து வீச்சில் இலங்கை சார்பில் லஹிரு குமார மற்றும் துஷ்மந்த சமீர தலா 2 விக்கெட்டுகளையும், பிரவீன் ஜயவிக்ரம, சமிக கருணா ரத்ன ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

155 என்ற இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு வெற்றியை பதிவு செய்தது. இலங்கை சார்பில் அதிகப்படியாக குசல் மெண்டீஸ் ஆட்டமிழக்காது 69 (58) ஓட்டங்களையும், தசுன் ஷாக்க 35 (31) ஒட்டங்களையும் அதிகப்படியாக பெற்றனர். எவ்வாறெனினும் அவுஸ்திரேலியா அணி 5 போட்டிகள் கொண்ட T-20 தொடரை 4:1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Spread the love