அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் இலங்கை விஜயம்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலிய பாதுகாப்பு திணைக்களத்தின் உலக விவகாரப் பிரிவின் உதவி செயலாளர் டொம் மெனடு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயிலுள்ள பாதுகாப்பு அமைச்சு தலைமையகத்தில் நேற்று (பெப்ரவரி 17) இந்த சந்திப்பு இடம்பெற்றது. பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு டேவிட் ஹொலி தலைமையிலான அவுஸ்திரேலிய தூதுக்குழுவினரை பாதுகாப்புச் செயலாளர் வரவேற்றார்.

இந்து சமுத்திர பிராந்தியத்தில் இலங்கையின் கேந்திர முக்கியத்துவம், பிராந்திய பாதுகாப்பு மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு உட்பட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக இந்த சந்திப்பின் போது விரிவாக கலந்துரையாடப்பட்டன. இன்றைய இந்த சந்திப்பின் நினைவாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் தலைமையிலான குழுவினருக்கு பாதுகாப்புச் செயலாளர் நினைவுச் சின்னங்களை வழங்கி வைத்தார்.

கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான சுகாதார நடைமுறைகளுக்கமைய இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார, அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் இயன் கேன் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

source from defence,lk
Spread the love