நாடளாவிய ரீதியில் இன்று அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனங்களும் ஜனாதிபதி செயலகம் முன்பாக நடைபெற்றுவரும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதலைக் கண்டித்தும் அவசர காலச் சட்டத்தை நீக்குமாறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் யாழ்.பல்கலைக்கழக ஆசிரிய சங்கமும் இப்போராட்டத்தினை முன்னெடுத்திருந்தது. இதையடுத்து ஆசிரிய சங்கத்தினர் சமூகம் மீடியாவுக்கு கருத்து தெரிவிக்கையில், அரசாங்கத்தினால் நிராயுதபாணிகளாக இருந்த போராட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளுக்கு எதிராகவே இந்த போராட்டத்தினை நடத்தியிருந்தோம்.
அத்துடன், அவசரகாலச் சட்டத்தினை நீக்க வேண்டும் என்பதற்காகவும் குறித்த போராட்டத்தினை நடத்தியிருந்தோம். தென்னிலங்கை போராட்டக்காரர்களுக்கு தோள் கொடுப்பதன் ஊடாக ஒற்றுமையை ஏற்படுத்த முயற்சிக்கின்றோம். மேலும் இப்போராட்டத்தில் எமது ஜனநாயகத்தினை உறுதிப்படுத்தும் வகையில் 4 கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம்.
அவையாவன,
1.அவசரகாலச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.
2.பயங்கரவாதச் சட்டத்தினை நீக்க வேண்டும்.
3.இராணுவத்தை, தளங்களுக்குள் முடக்க வேண்டும்.
4.மக்களின் பேச்சுச் சுதந்திரம், ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் ஆகியவற்றை தடுக்காது இருத்தல் வேண்டும். – என்றனர்.