யாழ்.மாவட்ட கடற்தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் இந்தியத் துணைத் தூதுவரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதுவராலயத்தில் இன்று இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் தீவகப் பகுதிகளில் எல்லை தாண்டிய இந்திய இழுவைப்படகுகளின் வருகை நேற்று மற்றும் நேற்று முன்தினம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் அதனைக் கட்டுப்படுத்துமாறு கோரி யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தலைமையிலான கடற்தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் யாழ் இந்தியத் துணை தூதுவரான ராகேஸ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை சந்தித்துள்ளனர்.
இக்கலந்துரையாடலின்போது ஏற்கனவே யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலாளர்களால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் காரணமாக இலங்கை எல்லைக்குள் அத்துமீறிய இந்திய இழுவை மடி படகுகளின் வருகை கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், மீண்டும் எழுவைதீவு, அனலைதீவு, நயினாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய பகுதிகளில் இந்தியப்படகுகள் வருவதாகவும் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.