தமிழ்மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வாக சமஷ்டி அடிப்படையிலான தீர்வை அமுல்படுத்த வேண்டும். அதுவரை, ஏற்கெனவே சட்டத்திலுள்ள 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த கோரும் ஆவணத்தில் தமிழ்க் கட்சிகள் கையெழுத்திட்டுள்ளன.
கடந்த 21ஆம் திகதி இறுதி செய்யப்பட்ட ஆவணத்தில் சம்பந்தன் உட்பட பல தலைவர்களும் நேற்று ஒப்பமிட்டனர். அந்த ஆவணத்தில் இரா.சம்பந்தன் (தலைவர் – தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு), சி.வி.விக்னேஸ்வரன் (தலைவர் – தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி). சுரேஷ் பிரேமச்சந்திரன் (தலைவர் – ஈ.பி.ஆர்.எல்.எப்.), என் ஸ்ரீகாந்தா (தலைவர் – தமிழ்த் தேசியக் கட்சி), செல்வம் அடைக்கலநாதன் (தலைவர் – ரெலோ), த.சித்தார்த்தன் (தலைவர் – புளொட்) ஆகியோர் நேற்று ஒப்பமிட்டனர். மாவை சேனாதிராசா (தலைவர் – இலங்கைத் தமிழரசுக் கட்சி) இன்று அந்த ஆவணத்தில் ஒப்பமிடுவார் என்று எதிர் பார்க்கப்படுகின்றது. கடந்த 21ஆம் திகதி கொழும்பிலுள்ள குளோபல் டவர் ஹோட்டலில் நடைபெற்ற தமிழர் தரப்புக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் இறுதி செய்யப்பட்ட கடிதமே இப்போது தமிழ்க் கட்சிகளின் தலைவர்களால் ஒப்பமிடப்பட்டு இந்தியப் பிரதமருக்கு அனுப்பப்படுகின்றது.
இதேவேளை, இந்த ஆவணத்தயாரிப்பு முயற்சியில் மும்முரமாக செயற்பட்ட மனோ கணேசன் கடைசி நேரத்தில் காலைவாரினார். அவர் கையெழுத்திடவில்லை. நேற்று முன்தினம் தமிழ் முற்போக்கு கூட்டணியின் மத்தியகுழு கூடியது. இதில் ஆவணத்தில் கையெழுத்திடு வதில்லையென முடிவானது. இதை ஏற்பாட்டாளர்களிடம் மனோ கணேசன் தெரிவித்திருந்தார். இந்திய – இலங்கை உடன்படிக்கையை அமுல்படுத்துமாறு தமது கட்சிக் கொள்கையை மீறிகையெழுத்திட முடியாதென ரவூப் ஹக்கீம் முன்னதாக தெரிவித்திருந்தார். சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தலைவர்கள் நாளை சனிக்கிழமை இந்தியத் தூதுவரிடம் குறித்த ஆவணத்தை கையளிக்கவுள்ளனர்.