இந்தியா, அமெரிக்கா இணைந்து அரசியல் தீர்வுக்கு உதவ வேண்டும் -அமெரிக்காவிடம் தமிழ் கூட்டமைப்பு வலியுறுத்து

தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்கு இந்தியாவுடன் அமெரிக்காவும் இணைந்து இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கைக்கான அமெரிக்க துணை தூதரிடம் கோரியுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இலங்கைக்கான அமெரிக்க துணை தூதர் டக் சோனெக் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துள்ள  நிலையில் நேற்று புதன்கிழமை தமிழ் தேசிய கூட்டமைப்பினரை சந்தித்து பேசினார். காலை உணவுடன் நடைபெற்ற இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், எஸ்.சிறிதரன் மற்றும் வடமாகாண சபையில் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஆகியோர் பங்கு கொண்டிருந்தனர்.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் நல்லிணக்கம் குறித்து பேசப்படுகின்றது. எனினும் நல்லிணக்கத்துக்கு அடிப்படையான அரசியல் தீர்வுக்கு எந்தவொரு அரசாங்கத்தாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்விடயத்தில் ஆர்வமுடன் செயற்படவேண்டும். இந்தியாவுடன் அமெரிக்காவும் தலையிட்டு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழ்க் கூட்டமைப்பினர் கோரினர்.  அத்துடன் வடக்கு, கிழக்குப் பகுதிக்கு அபிவிருத்தி உதவிகள் கிடைக்கப் பெறவில்லை . அமெரிக்கா அபிவிருத்திக்கு உதவ முன்வர வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். மேலும் ஜெனீவாவில் தமிழ் மக்கள் மீது கரிசனை கொண்டு பிரேரணையை அமெரிக்கா கொண்டு வந்து நிறைவேற்றியது. இதற்கு தமிழ் மக்கள் சார்பில் நன்றிகளை தெரிவிப்பதாக அமெரிக்க துணை தூதரிடம் தமிழ் கூட்டமைப்பினர் தெரிவித்தனர். 

Spread the love