இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் பணியாற்றிவரும் இலங்கை பிரஜைகள் பலரை, அவர்களுடைய அர்ப்பணிப்புடனான நீண்டகால சேவையை அங்கீகரிக்கும் வகையில் உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே உயர் ஸ்தானிகராலயத்தால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த விசேட நிகழ்வொன்றில் கௌரவித்தார். 30 வருடங்களுக்கும் அதிககாலமாக சேவையாற்றிவரும் மாலா கமகே மற்றும் நெய்ல் ஜோசெப் ரெஜிஸ் ஆகிய இருவருக்கும் இந்தியாவுக்கான இரு வழி விமான டிக்கெட்டுக்களும் இந்திய பயணத்துக்கான விசேட பணக்கொடுப்பனவும் வழங்கப்பட்டிருந்தது.
அத்துடன் ஷிரானி ஶ்ரீதரன், சுஜாதா ஹெட்டியாராச்சி, நிரஞ்சலா மனோரி ஜோசெப் மற்றும் லக்ஷி சமரவிக்ரம ஆகியோருக்கு அண்மையில் பதவி உயர்வும் வழங்கப்பட்டது. உயர் ஸ்தானிகராலயத்தில் அதிசிறந்த சேவையை வழங்கிவருகின்றமைக்காக இலங்கையைச்சேர்ந்த அலுவலர்களுக்கு உயர் ஸ்தானிகர் நன்றியைத் தெரிவித்தார். குறிப்பாக இலங்கையில் அபிவிருத்தி ஒத்துழைப்பு, பயணங்கள், வர்த்தகம் மற்றும் வியாபாரம் போன்ற மக்களுடன் நேரடியான தொடர்பினைக்கொண்டுள்ள விடயங்களில் இந்திய இலங்கை உறவுகளை வலுவாக்கும் நோக்கத்திற்கு உயர் ஸ்தானிகராலயத்திற்கான அவர்களின் பங்களிப்பு ஆதரவாக அமைந்தது என உயர் ஸ்தானிகர் குறிப்பிட்டார்.
உயர் ஸ்தானிகராலய அலுவலர்களில் கிட்டத்தட்ட 50 வீதமானவர்கள் இலங்கைப்பிரஜைகளாக உள்ளனர். இதேபோல ஹம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய கொன்சுலேட் ஜெனரல் அலுவலகங்களிலும் கண்டியில் உள்ள இந்திய துணை உயர் ஸ்தானிகராலயத்திலும் கணிசமான அளவிலான அலுவலர்கள் உள்ளூரிலிருந்து பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர். இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளினதும் பன்முகத்தன்மையினைப் பிரதிபலிக்கும் பல்வேறு சமூகங்கள், மொழிகள், கலாசாரப் பின்னணிகளைச்சார்ந்தவர்களாக அவர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.