நேற்று முன்தினம்(23) மாலை இந்திய மீனவர்களின் 30 ட்ரோலர் படகுகள் நெடுந்தீவை அண்மித்த இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்தன. இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்களை விரட்டியடித்ததாகவும் அவர்களது வலைகளை சேதப்படுத்தியதாகவும் இந்திய ஊடகங்கள் இது தொடர்பாக செய்தி வௌியிட்டிருந்தன.
இந்த குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை என தெரிவித்த கடற்படைப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா, இந்திய ட்ரோலர் படகுகளை திருப்பியனுப்புவதற்கு வழமையான நடைமுறையின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறினார்.
இந்திய பிரதான உளவு அமைப்பான RAW எனப்படும் ஆராய்ச்சி பகுப்பாய்வு பிரிவின் தலைமை நிர்வாகி சமந்த் கோயல் (Samant Goel) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டதாக தகவல் வௌியாகியுள்ள பின்புலத்திலேயே இந்திய மீனவர்களின் ட்ரோலர் படகுகள் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்துள்ளன. RAW அமைப்பின் தலைமை நிர்வாகி ஜனாதிபதியை சந்தித்து இரகசிய பேச்சுவார்த்தை நடத்திவிட்டுச் சென்றதாக யாழ்ப்பாணத்தில் இருந்து வௌிவருகின்ற காலைக்கதிர் ePaper நேற்று செய்தி வௌியிட்டிருந்தது.
இந்த செய்தியை உறுதிப்படுத்தும் வகையில், தமிழகத்தின் தந்தி தொலைக்காட்சி மற்றும் தமிழ் ஒன்லைன் இந்தியா இணையத்தளம் ஆகியன இன்று செய்தி வௌியிட்டிருந்தன. இலங்கையில் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும் நடவடிக்கையில் மத்திய பா.ஜ.க அரசு மும்முரமாக இருப்பதாக தகவல்கள் வௌியாகியுள்ளதாக தமிழ் ஒன்லைன் இந்தியா இணையத்தளம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்னதாக தமிழகம் சார்ந்த நடவடிக்கைகளில், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சி அரசு தீவிரம் காட்டி வருவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைக்கு காரணமான கச்சத்தீவை, இலங்கையிடம் இருந்து இந்தியா திரும்பப் பெறும் நடவடிக்கைகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகவும் தமிழ் ஒன்லைன் இந்தியா வௌியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் இந்த தலையீட்டைத் தொடர்ந்து சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள், ஈழத் தமிழரை தங்கள் பக்கம் வளைத்துப் போடுவதற்கான பகீரத பிரயத்தனம் செய்வதாகவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் இன்று மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்தார். மன்னார் மாவட்டத்தின் கரடிக்குழி பகுதிக்கு விஜயம் செய்த இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி, சுயதொழிலை ஊக்குவிப்பதற்காக தையல் இயந்திரங்களை வழங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து கரடிக்குழி வித்தியாலயத்திற்கு மடிக்கணினிகளையும் வழங்கி வைத்தார். இதன்போது, பாடசாலையின் குறைபாடுகள் தொடர்பிலும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கேட்டறிந்து கொண்டார்.