ரொஷான் நாகலிங்கம் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஐ.நா.வின் பங்களிப்பு தேவையானதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஐ.நா.அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளனர். ஐ.நா.வின் ஆசிய-பசுபிக் பிராந்திய விவகாரங்களுக்கான பணிப்பாளர் மற்றும் ஆசிய-பசுபிக் பிராந்தியத்துக்கான அரசியல் விவகாரங்களுக்கான அதிகாரி ஆகியோருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையிலான சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு-7இலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் இடம்பெற்றது.
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எம்.எ.சுமந்திரன் ஆகியோர் பங்கு கொண்டிருந்தனர். இதன் போது கருத்து தெரிவித்த கூட்டமைப்பினர், வடக்கு, கிழக்கில் அரச நிறுவனங்களால் காணிகள் அபகரிக்கப்படுகின்றன. இதற்கு காரணம் தமிழ் மக்களின் குடிப்பரம்பலை மாற்றுவதற்கும் வடக்கு, கிழக்கை நில ரீதியாக தொடர்பற்றதாக்குவதாகும்.
ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் தீர்மானங்களை இலங்கை நிறைவேற்றவில்லை. காணாமல் போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டதை தவிர வேறு ஒன்றும் நடைபெறவில்லை. இந்நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஐ.நா.வின் பங்களிப்பு தேவையான நடவடிக்கை எனத் தெரிவித்தனர். இதற்கு அவர்கள் இலங்கை விடயங்களை கண்காணித்து ஐ.நா.வுக்கு அறிக்கை அனுப்பி வருவதாகவும் ஐ.நா.வில் இலங்கை விவகாரம் முக்கிய விடயமாக உள்ளது எனவும் தெரிவித்தனர்.