7 நாட்களுக்கு போதுமான எரிபொருள் மட்டுமே கையிருப்பில் – மின்சார சபை

தற்போது நாட்டில் நிலவுவது எரிபொருள் தட்டுப்பாடு அல்ல. எரிபொருளுக்கு கொடுக்க டொலர்கள் இல்லாததே பிரச்சினை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பொறியியலாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

நேற்று (23) காலை ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த சங்கத்தின் பேச்சாளர்  நந்திக பத்திரகே மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தார். 37,000 மெற்றிக் தொன் டீசலுக்கு 33 மில்லியன் அமெரிக்க டொலர்களை அரசாங்கம் கொடுத்துள்ளது, என்றும் ஆனால் 8,000 மெற்றிக் தொன் நுகர்வோர் பயன்பாட்டுக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்குக் கொடுக்கப்பட்டால், மீதி உள்ள எரிபொருளானது 31,000தொன் டீசல்களும் 7 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.


எரிபொருளுக்காக மில்லியன் டொலர்கள் செலவிட்டதாக செய்திகள் வெளியாகும் போது மக்கள் அப்பாவியாக அதனை நம்புகிறார்கள் ஆனால் ஒரு முழு நாட்டுக்கும் மின்சாரம் வழங்கும்போது அந்த மில்லியன் டொலர்கள் என்பது உண்மையில் ஒரு சிறிய தொகையாகும் என்று சுட்டிக்காட்டினார். எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு பணமில்லை என்கிற நிலை வந்தாலோ, மின் உற்பத்தி நிலையங்களை இயக்குவதற்கு எரிபொருள் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டாலோ மின்சாரத்தை தொடர்ச்சியாக வழங்குவதற்கான மாற்றுவழித்திட்டம் எதுவும் இலங்கை மின்சார சபைக்கு இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Spread the love