கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகிறது. இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.பி.தர்மசேன தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் 2 ஆயிரத்து 437 பரீட்சை நிலையங்களில் இன்று நடைபெறுகிறது.எதிர்வரும் ஐந்தாம் திகதி வரை பரீட்சை இடம்பெறும். பரீட்சை ஆரம்பமாவதற்கு முன்னர் சகல மாணவர்களும் பரீட்சை நிலையங்களுக்கு வருகை தரவேண்டும் என ஆணையாளர் நாயகம் பரீட்சார்த்திகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். சுகாதார வழிமுறைகளை முறையபாக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொவிட் தொற்றுக்கு உள்ளான மாணவர்களுக்கு வசதியாக 29 வைத்தியசாலைகளில் உயர்தரப் பரீட்சை மத்திய நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. கொவிட் தொற்றுக்கு உள்ளான மாணவர்கள் இந்த பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்ற முடியும் என்றும் அவர் தெரிவித்தார். இதேவேளை, உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக ராஜாங்க அமைச்சர் தினும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப் பகுதியில் மாணவர்கள் கொவிட் தொற்றுக்கு இலக்காகும் இடத்து தமது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிக்கு அது பற்றித் தெரியப்படுத்துமாறு குடும்ப சுகாதார பணியகத்தின் மகளிர் மற்றும் சிறுவர் சுகாதாரத்துறை பணிப்பாளரான விசேட வைத்திய நிபுணர் சித்திரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார். கொவிட் தொற்றுக்கு இலக்காகும் மாணவர்களுக்காக வைத்தியசாலைகளில் தனியான வார்ட் ஒன்று தயார் படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். அவ்வாறான மாணவர்கள் அந்த வைத்தியசாலையில் இருந்து பரீட்சைக்குத் தோற்ற முடியும் என்றும் விசேட வைத்திய நிபுணர் சித்திரமாலி டி சில்வா மேலும் கூறினார்.