2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று(22) இடம்பெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று(22) காலை 9.30 மணிக்கு பாராளுமன்ற சபை நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. இன்றைய வாக்கெடுப்பின்போது, வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
நேற்று இடம்பெற்ற அந்த கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. எனினும், சிலர் ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய மக்கள் கூட்டணி தீர்மானித்துள்ளது. நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் கூட்டணியின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதேவேளை, தேசிய மக்கள் சக்தியும் இன்றைய தினம் வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பதற்கு முடிவு செய்துள்ளது.
வரவு செலவுத்திட்டத்திற்கு வாக்களிப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றில் இன்றைய தினம் கூடி தீர்மானிக்கவுள்ளதாக அதன் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையிலான அணியினர் வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளனர்.
எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வரவு செலவுத்திட்டத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கவுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.