இம்ரான் கான் ஐஎஸ்ஐ கைப்பாவை – தாலிபான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஐஎஸ்ஐ அமைப்பால் ஆட்டிவைக்கப்படும் கைப்பாவை என தாலிபான்கள் காட்டமாக விமர்சித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தாலிபான்கள் கைப்பற்றி 5 மாதங்களை கடந்துவிட்ட நிலையில், பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கை மையமாக கொண்டு அகமது மசூத் தலைமையிலான தேசிய எதிர்ப்புப் படையினர் (NRF) தாலிபான்களுக்கு எதிராக இன்னமும் போராடி வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களின் மூலம் தேசிய எதிர்ப்புப் படையினர் வீடியோ ஒன்றை வெளியிட்டு, ஆப்கானிஸ்தானியர்கள் மேலும் அமைதியாக இருக்கக் கூடாது என தாலிபான்களுக்கு எதிரான போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனிடையே தேசிய எதிர்ப்புப் படையின் தலைவர் அகமது மசூத் வெளியிட்டுள்ள குரல் பதிவில், தங்களின் போராட்டம் குறிப்பிட்ட இனக் குழுவுக்கானது, குறிப்பிட்ட பகுதியினருக்கானது அல்ல, ஆனால் ஒட்டுமொத்த ஆப்கன் சுதந்திரத்துக்கானது என தெரிவித்தார்.

தேசிய எதிர்ப்புப் படையினர் வசம் தற்போது அதிநவீன ஆயுதங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. NRF படையைச் சேர்ந்த வீரர்கள் சிலர் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் (anti-tank guided missiles) வைத்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. NRF வசம் இருக்கக்கூடிய பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் மிகவும் நவீனமானது, இவை இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் வரை செயல்படும் என கூறப்படுகிறது.

இதனிடையே, தாலிபான்கள் தன்னை கைது செய்துள்ளதாக பெண் செயற்பாட்டாளர் தமனா பர்யனி வீடியோ வெளியிட்டு அதன் மூலம் கூறிய குற்றச்சாட்டை மறுத்த தாலிபான் செய்தித்தொடர்பாளர் சுகைல் ஷாஹீன், அவர் வெளிநாட்டில் அடைக்கலம் தேடியுள்ளார், அதற்காகவே அப்படி ஒரு குற்றச்சாட்டை கூறியிருக்கிறார். அவர் கூறியது போல சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என கூறினார். தாலிபான்களுக்கு எதிராக காபுல் வீதியில் போராட்டம் நடத்திய 25 பெண்களில் ஒருவர் தான் இந்த தமனா பர்யனி.

இதேபோல, உள்ளூர் செய்தித்தொலைக்காட்சிக்கு தாலிபான் செய்தித்தொடர்பாளர் ஒருவர் அளித்த பேட்டியில், “பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் கைப்பாவை. அத்தகைய அரசாங்கம் இஸ்லாமிய எமிரேட்ஸுக்கு (ஆப்கானிஸ்தான்) எதிராக தேசிய உணர்வுள்ள ஆப்கானியர்களைத் தூண்டிவிட முயற்சிக்கிறது. இது அவர்களின் நோக்கங்களில் ஒன்றாகும்,

பாகிஸ்தான் சிதைந்துவிடும், ஏற்கனவே FATF அமைப்பினால் கருப்புப் பட்டியலில் பாகிஸ்தான் வைக்கப்பட்டுள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Spread the love