நெற் செய்கையில் நட்டத்தை எதிர்கொண்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்திருந்தது.
இழப்பீட்டிற்காக பெருந்தொகைப் பணத்தை அரசு ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
ஏறக்குறைய பதினோரு லட்சம் நெற்செய்கையாளர்கள், 2020ம் ஆண்டு பெரும்போகத்தில் 8 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் நெல் செய்கையை மேற்கொண்டிருந்ததாக கணிக்கப்படுகிறது.
இவ்வாறு நெற்செய்கையில் ஈடுபட்டு நட்டத்தை எதிர்கொண்டுள்ள உள்ளவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியவருகிறது. குடித்தொகை மதிப்பிட்டுத் திணைக்களம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம், விவசாய சேவை திணைக்களம் ஆகியன ஒன்றிணைந்து, பிராந்திய ரீதியில் நெற் செய்கை குறித்து ஆய்வு செய்து வருவதாக தெரிவித்த அமைச்சர், பெரும்போக விளைச்சலின் பின்னர், அவர்களுக்கு ஏற்பட்டுள்ள நட்டஈட்டை வழங்கப்படும் எனக் கூறினார்.
நெற்செய்கையாளர்களுக்கு ஏன் இழப்பீடு வழங்கப்படுகிறது ?
இலங்கையில் இயற்கை உரப் பாவனையின் மூலம் இயற்கை உணவை உற்பத்தி செய்யும் கொள்கைத் திட்டத்தை சனாதிபதி கொட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய அரசாங்கம் நடைமுறைப்படுத்தியிருந்தது.
இந்தத் திட்டத்தின் கீழ் , அசேதன உர பயன்பாட்டை முற்றாக தடை செய்து, சேதன உரத்தை பாவித்து நெற்செய்கையில் ஈடுபடுமாறு அரசாங்கம் விவசாயிகளை அறிவுறுத்தியது. இதற்கமைய, பெரும்போகத்தில் சேதன உரத்தை பயன்படுத்தி நெற்செய்கையில் ஈடுபட்டபோதிலும், அது எதிர்பார்த்த விளைசலைத் தரவில்லை.
பொதிய அளவு சேதன உரம் கிடைக்காத அதேநேரம், செயற்கை உரமும் இல்லாது விவசாயிகள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டனர். இதன் காரணமாக விவசாய நடவடிக்கைகள் பெருமளவு பாதிக்கப்பட்டு, தமது வாழ்வாதாரத்தை கூட இழக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர்.
இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், சேதன உர பயன்பாட்டை கட்டாயப்படுத்தி, தமது விவசாயத்தில் நட்டத்தை ஏற்படுத்தியமைக்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்று, தமக்கு நட்டஈட்டை வழங்க வேண்டும் என நெற்செய்கையாளர்கள் கோரிக்கையை முன்வைத்தனர். இவ்வாறான சூழ்நிலையிலேயே அரசாங்கம் இந்த நட்டஈடு வழங்கும் முடிவை எடுத்துள்ளது.
குறைந்த விளைச்சல்
அரசு விவசாயிகளுக்கு தகுந்த நட்டஈட்டை வழங்காது போனால், எதிர்வரும் பெரும்போகத்தில் நெற்செய்கையில் ஈடுபட முடியாத நிலை ஏற்படும் என விவசாய அமைப்புக்களின் தலைவர்கள் கூறுகின்றனர். இப் பெரும்போகத்தில் தாம் பெருமளவு நட்டமடைந்திருப்பதாகவும், வழமையாக ஒரு ஏக்கருக்கு 40 முதல் 45 மூட்டைகள் வரை விளைச்சலை ஈட்டக்கூடியதாகவும் கூறிய அவர்கள், இம்முறை அவை அரைவாசிக்கும் கீழாக குறைந்துவிட்டன. பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈட்டை வழங்குவதாக அரசு தெரிவித்துள்ளது. நட்ட ஈடு கிடைக்காவிட்டால், அடுத்த போகத்தை விவசாயிகளினால் மேற்கொள்ள முடியாது போகும் என அவர்கள் எச்சரிக்கின்றனர்.
விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்
அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பானது, காலம் கடந்த ஒன்று என ஓய்வூப் பெற்ற பிரதி விவசாய பணிப்பாளர் பத்மநாதன் சத்தியமூர்த்தி கூறுகிறார். நாட்டின் வடக்கு-கிழக்கு விவசாயிகள் பிற மாகாண விவசாயிகள் அறுவடை செய்யும் முன்பாகவே தமது பெரும்போக நெற்செய்கையை முடிவுக்குக் கொண்டுவந்துவிடுவார்கள் எனக் கூறிய அவர், வடக்கு-கிழக்கு விவசாயிகள் தமது மொத்த நெற்செய்கையில் அறுபது வீதத்திற்கும் அதிகமானவற்றை ஏற்கனவே அறுவடை செய்துவிட்டனர். இவர்களுக்கு அவ்வாறு இழப்பைக் கணித்து நட்ட ஈட்டை வழங்க முடியும். இவ்வாறான சூழ்நிலையில் உத்தேச அடிப்படையிலேயே இந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க முடியும். உண்மையான இழப்பீட்டை இவர்களுக்கு வழங்க முடியாது என அவர் குறிப்பிட்டார்.
நிலைமை எவ்வாறு இருந்த போதிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தகுந்த நட்டஈட்டை வழங்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.