தற்போதுள்ள சட்டங்களின் அடிப்படையில் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை தேர்தல் ஆணைக்குழுவால் தடுக்க முடியாது என சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாட்டு அமைப்பு (பப்ரல்) தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள சட்டத்தை கருத்திற் கொண்டு இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களின் வேட்புமனுக்களை நிராகரிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இல்லை என அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். இதன்படி, தேர்தலுக்கான வேட்புமனுக்களை கையளிக்கும் வேளையில் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களின் வேட்புமனுக்களை நிராகரிப்பது தொடர்பில் சட்டங்கள் திருத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தற்போது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி.க்களில் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் இருக்கிறார்களா என்பது குறித்த அறிக்கையை வழங்குமாறு சபாநாயகர் குடிவரவு திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதற்காக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள், தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் விமான அனுமதிப்பத்திர விபரங்கள் அடங்கிய ஆவணம் குடிவரவு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.