இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட தடை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை திருத்தப்படும்-அமைச்சர் ரமேஷ் பத்திரன

அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக சில இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட தடை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை திருத்தப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (13) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் இதுதொடர்பாக பதில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிக்கையில் தற்காலிகமாக சில பொருட்களின் இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட தடை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை திருத்தப்படுவதற்கு தீர்மானம் எடுத்துள்ளதாகவும் கூறினார்..

அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக இறக்குமதி கட்டுப்பாடு அமுலில் உள்ளதாகவும், அப்பிரச்சினை தீர்க்கப்பட்டதும் அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்படும் என்றும் குறித்த தடை காரணமாக சில தொழில்களில் தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பத்திரன மேலும் குறிப்பிட்டார்.

சில துறைகளில் ஏற்பட்ட பிரச்சனைகளையும் தடைகளையும் கருத்தில் கொண்டு, இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை திருத்தப்பட தீர்மானம் எடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். திருத்தப்பட்ட பட்டியல் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு தேவையான அனுமதி பெறப்படும் எனவும் அமைச்சர் ரமேஷ் பத்திரன மேலும் தெரிவித்தார்.

Spread the love