குவாலிபையர் 1 ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ்-சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 26 ஆம் திகதி தொடங்கியது. இதில் 10 அணிகள் பங்கேற்று விளையாடின. லீக் ஆட்டங்கள் முடிந்தன. ஒவ்வொரு அணியும் 14 போட்டியில் விளையாடின. புதுமுகமான குஜராத் டைட்டன்ஸ் 10 வெற்றி, 4 தோல்வியுடன் 20 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ், மற்றொரு புதுமுக அணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் தலா 18 புள்ளிகளும் (9 வெற்றி, 5 தோல்வி) பெற்று முறையே 2 ஆவது, 3 ஆவது இடங்களை பிடித்தன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் 16 புள்ளிகளுடன் (8 வெற்றி, 6 தோல்வி ) 4 ஆவது இடத்தை பிடித்தன.
முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. பிளே ஆப் சுற்று இன்று தொடங்குகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் குவாலிபையர்-1 ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட் டன்ஸ்-சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். தோல்வி அடையும் அணி லக்னோ-பெங்களுர் மோதும் எலிமினேட்டர் ஆட்டத்தில் வெல்லும் அணியுடன் குவாலிபையர் 2 போட்டியில் மோதும். எலிமினேட்டர் 25 திகதி கொல்கத்தாவில் நடைபெறும். இதில் தோற்கும் அணி வெளியேற்றப்படும். குவாலிபையர் 2 ஆட்டம் 27 ஆம் திகதியும், இறுதிப்போட்டி 29 ஆம்; திகதியும் அகமதாபாத்தில் நடக்கிறது.