முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுவதை மறுத்துள்ள காணாமற் போனோருக்கான அலுவலகத்தின் ( ஓ.எம்.பி.) தலைவர் மகேஷ் கட்டுண்டல அதற்கு பதிலாக 60,000 பொதுமக்களை இராணுவம் மீட்டதாக கூறியுள்ளார். அதேவேளை காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் போதுமான அளவுக்கு எதுவும் செய்யவில்லை என்ற விமர்சனத்திற்கு எதிராக அவர், அந்த நிறுவனத்தை பாதுகாத்துள்ளார்.
சரணடைந்தவர்கள் காணாமல்போனார்கள் என்ற கூற்றுக்களை மறுத்த அவர், காணாமல் போனவர்களில் பெரும்பாலானோர் விடுதலைப் புலிகள் அல்லது அதற்கு எதிரான பிரிவினரால் கடத்தப்பட்டவர்கள் என்றும் கூறியுள்ளார். வெளிநாட்டில் வசிப்பவர்கள் காணாமல் போனதாகக் கூறப்படும் சுமார் 50 விடயங்களை அலுவலகம் கண்டுபிடித்துள்ளதெனவும் அவர் கூறியுள்ளார் அலுவலகம் அதன் செயற்பாடுகளில், இறப்பு அல்லது இல்லாததற்கான சான்றிதழை அவர்கள் கோரும்போது மட்டுமே வழங்குகிறது என்றும் கட்டுண்டல கூறியுள்ளார்.
அதே வேளை இழப்பீடு 2,00,000 ரூபாவாகும் எவ்வாறாயினும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும் – ஏனையவர்களும் , காணாமற் போனோர் அலுவலகத்தின் முயற்சிகளை தவறானவையென தெரிவித்துள்ளனர். காணாமல் போன ஒருவரைக் கண்டுபிடிக்கவோ அல்லது காணாமல் போனவர்களின் விதியை அர்த்தமுள்ள வழிகளில் தெளிவுபடுத்தவோ முடியவில்லை , மேலும் அதன் தற்போதைய நோக்கம் கோப்புகளை மூடுவதை விரைவுப்டுத்துவதாகும் என்று அமைப்பு அக்டோபரில் வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மோசமான பொருளாதார நெருக்கடியின் மத்தியில் எரிபொருள் பற்றாக்குறை நாட்டை முடக்கியிருக்கும் நிலையில் வருட இறுதிக்குள் 5,000 காணாமலாக்கப்பட்டோர் உறவுகளின் வாக்குமூலங்களை பெறுவது என்ற இலக்கை அடைய முடியாது என்று காணாமற்போனோருக்கான அலுவலகத்தின் பேச்சாளர் கூறியுள்ளார்.