இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மேதகு மிசுகோஷி ஹிடேகி (MIZUKOSHI HIDEAKI), பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை( Kamal Gunaratne) (டிசம்பர்,15) சந்தித்தார். பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளுக்குமிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து கலந்துரையாடப்பட்டன. மேலும் இந்த சந்திப்பில் நாடுகளுக்கிடையிலான மனிதவள பரிமாற்றம் மற்றும் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கான வாய்ப்புகள் தொடர்பாகவும் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் தூதுவர் மிசுகோஷிக்கும் இடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றது.
ஜப்பானிய கடற்படை கப்பல்கள் இலங்கைக்கு விஜயம் செய்தபோது அவற்றிற்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தமைக்காக ஜப்பானிய தூதுவர் பாதுகாப்பு செயலாளருக்கு இதன்போது நன்றி தெரிவித்தார். இரு நாடுகளுக்குமிடையே நீண்ட காலமாக நிலவும் உறவுகளை வலுப்படுத்த தனது முழு ஒத்துழைப்பு மற்றும் ஆதரவை வழங்குவதாக ஜெனரல் குணரத்ன இதன்போது உறுதியளித்தார்.
மேலும் இந்த சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன. கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய இந்த சந்திப்பு இடம்பெற்றது. பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார, ஜப்பானிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டனுக்கு ஃபுகௌரா உள்ளிட்ட ஜப்பானிய தூதரக அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.