நாட்டைக் கட்டியெழுப்பும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொலைநோக்குப் பார்வை சர்வதேசத் தலைவர்களுக்கு அப்பாற்பட்டது என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்க அதிகாரிகள் மற்றும் உலக வங்கி பிரதிநிதிகளுக்கு இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டை பொருளாதார ரீதியில் ஸ்திரப்படுத்துவதற்கும் வலுவான கொள்கை கட்டமைப்பைக் கொண்டிருப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் இதுவே சிறந்த சந்தர்ப்பமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு நாடு என்ற ரீதியில் அந்த திறமை எங்களிடம் உள்ளது. அதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம் என்றும் சாகல ரத்நாயக்க கூறியுள்ளார்.
அடுத்த இரண்டு வாரங்களின் முடிவில், நாட்டின் அபிவிருத்திக்கான கொள்கை கட்டமைப்பை தயாரித்தல், அதன் வரைபடத்தை தயாரித்தல் மற்றும் காலவரையறைக்கு ஏற்ப அனைவரையும் அர்ப்பணித்தல் தொடர்பான இறுதி அறிக்கையை தயாரிப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.