இலங்கைக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கு தாம் தயார் – பிரித்தானிய பொதுநலவாய அமைச்சர்

காலநிலைமாற்ற சவால்களை குறைப்பதற்கும், சூழலை பாதுகாப்பதற்கும், இலங்கையினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கு தாம் தயாராக இருப்பதாக பிரித்தானிய பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கான அமைச்சர் தாரிக் அஹமட் (Tariq Ahmad) கூறியுள்ளார்.

இலங்கைக்கான தனது விஜயம் குறித்து கருத்து வெளியிட்ட அவர், கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் வசிக்கக்கூடிய அனைத்து இனங்களைச்சேர்ந்த மக்களையும் சந்திப்பதற்கு தான் திட்டமிட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
உலகளாவிய வர்த்தகம், முதலீடு மற்றும் பரஸ்பர பாதுகாப்பு ஆகியவற்றில் இந்திய – பசுபிக் பிராந்தியத்தின் முக்கியத்துவம் குறித்து பிரித்தானியா விசேட அவதானம் செலுத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாக பிரித்தானியா பொருளாதார ரீதியான தொடர்புகளை அடிப்படையாகக்கொண்ட வலையமைப்பைக் கட்டியெழுப்பிவரும் அதேவேளை, இவ்விடயத்தில் இலங்கையுடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு எதிர்பார்த்துள்ளது. அத்தோடு இலங்கையில் சிறந்த நிர்வாகத்தை வலுப்படுத்துவதுடன் அனைத்துப் பிரஜைகளுக்குமான மனித உரிமைகளை உறுதிசெய்வதை முன்னிறுத்தி செயற்பட்டுவருபவர்களுக்கு ஆதரவை வழங்கவேண்டும் என்பதில் நாம் தெளிவாக இருக்கின்றோம். பொதுநலவாய அமைப்பில் பிரித்தானியாவும் இலங்கையும் நீண்டகாலமாக அங்கம் வகிப்பதுடன் சர்வதேசத்தின் கரிசனைக்குரிய பல்வேறு விடயங்களில் ஒன்றிணைந்து செயலாற்றி வந்திருக்கின்றன. அவற்றில் காலநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகள் முக்கியமானவையாகும்.

பிரித்தானியாவால் காலநிலை மாற்றம் தொடர்பான ‘கோப் 26’ மாநாடு கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சர்வதேச நாடுகளின் தலைவர்களின் பங்குபற்றலுடன் கிளாஸ்கோ நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து சூழலுக்கு நேயமானதும் நிலைபேறானதுமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதன் அவசியத்தை அனைத்துத்தரப்பினருக்கும் உணர்த்துவதை இலக்காகக்கொண்டு இலங்கையுடன் ஒன்றிணைந்து பணியாற்ற பிரித்தானியா தயாராக இருக்கின்றது.

முக்கியமாக, இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் பொருளாதார ரீதியில் பல்வேறு நெருக்கடிகளையும் சவால்களையும் தோற்றுவித்திருக்கின்றது. இவ்வாறானதொரு பின்னணியில் புதியதொரு பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்கல், நிதிச்சேவை வழங்கல் துறையை அபிவிருத்திசெய்தல், வர்த்தக மற்றும் முதலீட்டுத்தொடர்புகளை விரிவுபடுத்தல் ஆகியவற்றுக்கு இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவோம் என்றார்.

Spread the love