ஜனநாயக போராட்டக்காரர்கள் மீது சில தினங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட அரச வன்முறையை அடுத்து சர்வதேச நாடுகளின் மூலமாக இலங்கைக்கு பொருளாதாரத் தடை உள்ளிட்ட பல்வேறு தடைகளை விதிக்க ஆராயப்பட்டு வருவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் திங்கள்கிழமை (25) இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசியல் சீர்திருத்த செயலகம் ஒன்றினை உருவாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். இதில் சகல மக்கள் குழுக்களும் தமது கருத்துக்களை முன்வைக்க முடியும். அத்துடன் தற்போதைய நிலையில் சகல அதிகாரங்களையும் தாண்டி மக்கள் பலம் வெற்றிகண்டுள்ளது. அரசியல் அமைப்பையும் தாண்டிய மக்கள் பலம் நாட்டின் தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளது.
ஆனால் நாட்டில் ஒரு பொறிமுறையை நிறுவி, நாட்டை அராஜகத்தின் பக்கம் கொண்டு செல்லாது முறையான வேலைத்திட்டத்தை அரசியல் அமைப்பின் மூலமாக முன்னெடுக்கவே நினைக்கின்றோம்.
ஆனால் இன்றைய நிலைமை அவ்வாறானது அல்ல. அரசியல் அமைப்பை மீறி, மக்கள் ஆணையை வென்ற ஒரு ஜனாதிபதியை நாட்டை விட்டே வெளியேற்றும் நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆகவே மக்கள் ஆணையை மீறிய எந்த செயற்பாடுகளையும் ஆட்சியாளர்கள் முன்னெடுக்க முடியாது என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. அரச அடக்குமுறை, அரச வன்முறை மற்றும் அரச பயங்கரவாதத்தை எவரும் முன்னெடுக்க முடியாது.
கடந்த மே மாதம் 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்டத்தின் மூலமாக ஜனாதிபதி, பிரதமர் இருவருமே வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த சில திங்களுக்கு முன்னர் மிக மோசமான அடக்குமுறை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. உலகில் பல பகுதிகளின் இலங்கைக்கு எதிரான எதிர்ப்புகள் வலுப்பெற்று வருகின்றன. அதுமட்டுமல்ல இலங்கைக்கு எதிரான தடைகளை விதிக்க கலந்துரையாடப்பட்டுள்ளது.
பொருளாதார தடை உள்ளிட்ட பல்வேறு தடைகளை விதிக்க வாய்ப்புகள் உள்ளன. இதனால் எமது மக்களே பாதிக்கப்படப்போகின்றனர். எனவே சர்வாதிகார போக்கினை கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும், மனித உரிமைகளை வலுப்படுத்தும், சிவில் மற்றும் சமூக பொருளாதார, கலாசார, மத சுதந்திரத்தை பலப்படுத்த வேண்டும். அதுவே நாடாக முன்னோக்கி செல்ல இருக்கும் பாதையாகும் என்றார்.