வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள், உயர்ஸ்தானிகராலயங்கள் ஊடாக சுற்றுலா ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம் ஆகியவற்றுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதற்கு வெளிவிவகார அமைச்சு தனது ஆதரவை வழங்க வேண்டும் என்றும் குழு வலியுறுத்தியது.
பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் கூடிய சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது.
அதிக வருமானம் பெறும் நாடுகளில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பது மற்றும் சுற்றுலாத் துறையின் வருமானத்தை அதிகரிப்பதன் முக்கியத்துவம் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், அதற்குத் தேவையான நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டது.
ஸ்பெயினின் மட்ரிட் நகரில் இலங்கைத் தூதரகத்தை திறப்பதன் மூலம் சுற்றுலாத்துறைக்குப் பாரிய அனுகூலத்தைப் பெற்றுக்கொடுக்கும் சாத்தியம் காணப்படுவதாகப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ யாதாமினி குணவர்தன சுட்டிக்காட்டியதோடு, இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் அறிக்கையை கோருவதற்குக் குழு தீர்மானித்தது.
ருமேனியாவில் இலங்கை தூதரகத்தை திறப்பது தொடர்பான பணிகளை விரைவுபடுத்துவதற்கான பரிந்துரைகளைக் குழு, வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளிடம் முன்வைத்தது. இலங்கைக்கும் ருமேனியாவுக்கும் இடையிலான உறவுகளை விரிவுபடுத்துவதும் ருமேனியாவில் பணிபுரியும் இலங்கை சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதும் இதன் நோக்கமாகும்.
மேலும், இந்தக் குழுவில் முன்னர் வழங்கப்பட்ட பரிந்துரையின்படி, வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்து, தமது கடவுச்சீட்டைப் புதுப்பிக்கும் போது, ஜூன் 1 ஆம் திகதி முதல் ஒன்லைனில் விண்ணப்பிக்கத் தேவையான நடவடிக்கைகளை குடிவரவு குடியகல்வு திணைக்களம் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைக்கு குழு நன்றி தெரிவித்தது.
இலங்கைக்கு வருகை தரும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் பணம் செலுத்துவதற்கு வசதியாக இலங்கை மத்திய வங்கியினால் முன்வைக்கப்பட்ட அறிக்கை குழுவில் கலந்துரையாடப்பட்டது. ரஷ்ய சுற்றுலாப் பயணிகளுக்காக மக்கள் வங்கியால் நடைமுறைப்படுத்தப்படும் முறைமை மற்றும் யூனியன் பே முறைமை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் குழு வினவியதுடன், உண்மையான சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த இரண்டு முறைகளையும் பின்பற்றலாம் என்பதை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அதற்கேற்ப செயல்பட தேவையான நடவடிக்கைகளை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு குழு பரிந்துரை செய்தது.
மேலும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஏனைய நாடுகள் பயன்படுத்தும் நவீன கட்டண முறைகள் தொடர்பில் அறிக்கை ஒன்றை தயாரித்து குழுவிடம் சமர்ப்பிக்குமாறு இலங்கை மத்திய வங்கியை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளுக்கு குழு பணிப்புரை விடுத்தது.
மேலும், 2030 ஆம் ஆண்டுக்குள் சுமார் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும், எனவே, சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் கலந்துரையாடி அவ்வாறுவரும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு பொருத்தமான பொறிமுறையைத் தயாரிக்குமாறு குழு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியது.
இக்கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான (பேராசிரியர்) ஜீ.எல்.பீரிஸ், நிரோஷன் பெரேரா, அகில எல்லாவல, கோகிலா குணவர்தன, யதாமினி குணவர்தன மற்றும் சட்டத்தரணி மதுர விதானகே ஆகியோர் கலந்துகொண்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி குழுவின் தலைவருடைய அனுமதியுடன் இதில் இணைந்துகொண்டார். வெளிவிவகார அமைச்சு, இலங்கை மத்திய வங்கி, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் ஆகியவற்றின் அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்