உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் இதற்கு முன்னர் பாராளுமன்றத்தில் அதிகாரமளிக்கப்பட்ட கடன் பெறும் எல்லையான 3000 பில்லியன் ரூபாவை (3 ட்ரில்லியன்) மேலும் 1000 பில்லியன் ரூபாவால் ( ஒரு ட்ரில்லியன்) அதிகரிப்பதற்கான தீர்மானம் விவாதம் இன்றி நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டது.
இதற்கமைய 1000 பில்லியன் ரூபாவுக்கு (ட்ரில்லியன்) விஞ்சாத தொகையொன்றை இலங்கையில் இலங்கை அரசாங்கத்தின் திறைசேரி உண்டியல்களை வெளியிடுவதன் மூலம் கடன்களைப் பெறுவதற்கும், அதன்பொருட்டு உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச்சட்டத்தின் 2 (1) ஆம் பிரிவின் கீழ் தேவையான சகல அதிகாரங்களும் இதன் மூலம் நிதி அமைச்சருக்குப் பெற்றுக்கொடுக்கப்படும். 1923ஆம் ஆண்டு 08 ஆம் இலக்க உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளை சட்டம் மற்றும் அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்துக்கு அமைய, பாராளுமன்ற தீர்மானத்தினால் அனுமதிக்கப்படுகின்ற தொகையை விஞ்சாது. இலங்கை அரசாங்கத்தின் திறைசேரி உண்டியல்களால் கடன் பெற்றுக்கொள்ளப்படும். இதற்கமைய 2021 ஆம் ஆண்டில் திறைசேரி உண்டியல்களை வெளியிடுவதன் மூலம் பாராளுமன்றத்தினால் இறுதியாக அனுமதியளிக்கப்பட்ட கூடிய கடன் எல்லையாக 3000 பில்லியன் ரூபாவாக அமைந்ததுடன், 2022 ஏப்ரலில் இறுதியாக செலுத்தப்பட வேண்டிய திறைசேரி உண்டியல்களின் பெறுமதி 2,860 பில்லியன் ரூபாவாகும்.
கொவிட் 19 தொற்றுநோய் சூழல் மற்றும் ஏனைய காரணங்களால் அரசாங்கத்தின் வருமானம் எதிர்பார்த்த அளவை விட மிகவும் குறைவாக அமைந்ததுடன், 2021 ஆம் ஆண்டு 30ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட செலவினங்களுக்கு கூடுதலாக கடன் சேவை கொடுப்பனவுகள், குறிப்பாக தொடர்ச்சியான செலவுகள் மற்றும் நலன்புரிச் செலவுகளுக்காக கடன் எல்லையை அதிகரிப்பதற்கான காரணமாக அமைந்தன.
மேலும், இலங்கையின் கடன் தரமதிப்பீடு குறைக்கப்பட்டதன் காரணமாக வெளிநாட்டு மூலங்களிலிருந்து நிதியைத் திரட்டுவதற்கு சர்வதேச சந்தைகளுக்கான அணுகலை இழந்துள்ளதால், நிதியமைச்சுக்கு உள்நாட்டு மூலங்களிலிருந்து கடன்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அத்துடன், 1969ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் 2022.04.09ஆம் திகதி 2274/42 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டு 06ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிக்கு இன்று பாராளுமன்றத்தின் அனுமதி கிடைத்தது.