அமெரிக்காவின் வேர்ஜீனியா மாநிலத்தில் உள்ள ஆய்வு நிறுவகமான எய்ட் டேட்டா நிறுவகத்தின் புதிய அறிக்கைக்கு அமைய, எதிர்வரும் இரண்டு முதல் 5 ஆண்டுகளுக்குள் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனா ஒரு கடற்படை தளத்தை நிறுவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்பாடு இலங்கையில் சீனாவின் இருப்பு தொடர்பான இந்தியாவின் அவதானத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் இரண்டு முதல் 5 ஆண்டுகளில் சீனாவின் கடற்படை தளங்களை நிறுவக்கூடிய 8 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக எய்ட் டேட்டா நிறுவகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் இலங்கையின் ஹம்பாந்தோட்டை முதல் இடத்தில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் எக்குவடோரிய கினியா, பாகிஸ்தான், கெமரூன், கம்போடியா, மொசாம்பிக் ஆகிய நாடுகளும் இந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக எய்ட் டேட்டா நிறுவகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2001ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டுக்கு இடையிலான காலப்பகுதியில் 29.9 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான 123 துறைமுக திட்டங்களை சீனா செயற்படுத்தியுள்ளது. அத்துடன் 46 நாடுகளில் 78 துறைமுகங்களின் கட்டுமானம் அல்லது அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு சீனா நிதியளித்துள்ளது. இந்த முதலீடுகளில் ஹம்பாந்தோட்டை துறைமுக திட்டத்தில் சீனாவின் மிகப் பெரிய முதலீடும் அடங்குகின்றது.