நெடுந்தீவில் வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு திணைக்களத்தின் ஆளுகைக்குட்பட்ட சுமார் 2500 ஏக்கர் நிலப்பரப்பில் பெருந்தோட்ட அமைச்சு மற்றும் அப்பகுதி மக்களால் இனம்காணப்பட்ட தென்னை பயிர்செய்கையினை வனக்கிராமங்கள் என்ற திட்டத்தின் கீழ் உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்னாயக்க தெரிவித்தார்.
நெடுந்தீவில் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலான “குறைகேள் மக்கள் சந்திப்பு” நேற்று வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சின் பணிப்பாளர் மா. பரமேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற போதே இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் பெருந்தோட்ட அமைச்சினால் நெடுந்தீவுப் பகுதியில் தென்னைப் பயிர்ச்செய்கையினை மேற்கொள்வதற்கான முன்மொழிவுகள் வைக்கப்பட்டுள்ளன. இதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பாக மக்களுடன் கலந்துரையாடியதற்கமைய நெடுந்தீவில் காணப்படும் வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு திணைக்களத்தின் ஆளுகைக்குட்பட்ட சுமார் 2500 ஏக்கர் நிலப்பரப்பில் அப்பிரதேசத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களை கொண்டு நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
மேலும் நெடுந்தீவு மக்களின் நீண்டகால பிரச்சினையாகவுள்ள கடற்போக்குவரத்து தொடர்பில் நேரில் அவதானித்த அமைச்சர் நெடுஞ்சாலைகள், போக்குவரத்து அமைச்சர் ஜோன்சன் பெர்ணாண்டோவுடன் உடனடியாகவே தொடர்பு கொண்டு கடற்போக்குவரத்து பிரச்சினைகள் மற்றும் நீண்டகாலம் புனரமைக்கப்படாத வீதிகள் தொடப்பிலும் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்வதாய் உறுதியளித்தார். மேலும், விளையாட்டுத்துறை தொடர்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவுடன் உடனடியாகவே தொலைபேசியில் தொடர்பு கொண்டு நெடுந்தீவு மாணவர்களுக்குரிய உடற்கல்வி உபகரணங்களை பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்தார்.