இலங்கையில் பெரும் உணவுப் பஞ்சம் ஏற்படவுள்ளது. இந்தச் சவாலை வெற்றிகொள்ள நாம் ஒன்றிணையவேண்டும். எனவே, வெற்றுக்காணிகளில் பயிரிடும் நடவடிக்கை உடனடியாக ஆரம்பிக்கப்படவேண்டும். இதற்கான திட்டங்கள் வெகுவிரைவில் வகுக்கப்படும் என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: உலகளவில் இந்த வருடம் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலக வங்கி அவசர நிதியாக 30 பில்லியன் டொலரை ஒதுக்கியுள்ளது. பெரியதொரு சவாலை எதிர்கொள்ளத் தயாராகிவருகின்றோம் என அமெரிக்க நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் உணவு இருக்காது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே உடனடியாக உற்பத்தி நடவடிக்கையை ஆரம்பிக்கவேண்டும். அதனால்தான் புதிய வரவு – செலவுத் திட்டமொன்றை வெகுவிரைவில் முன்வைக்க எதிர்பார்க்கின்றேன். நாட்டில் உள்ள அரசு வெற்றுக்காணிகளில் பயிரிடுவோம். மாவட்ட மட்டத்தில் குழுக்கள் அமைத்து இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் – என்றார்.