பாரிஸ் கிளப், கடந்த மாதம் தமது உறுப்பினர் அல்லாத சீனா மற்றும் இந்தியாவை அணுகி இலங்கையின் கடன்மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை நெருக்கமாக ஒருங்கிணைக்க முயன்ற போதிலும் இன்னும் பதிலுக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விடயம் தொடர்பில் நேரடியாக அறிந்த நபரொருவரை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
பாரிஸ் கிளப் என்பது மேற்கத்தேய கடன் வழங்கும் நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளின் குழுவாகும். இது, கடனாளி நாடுகள் அனுபவிக்கும் கடன் மீள் செலுத்தல் சிரமங்களுக்கு ஒருங்கிணைந்த மற்றும் நிலையான தீர்வுகளைக் கண்டறியும் செயற்பாட்டினை மேற்கொள்கிறது. கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை கடந்த செப்டம்பரில் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர், விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கான, சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்டத்திலான இணக்கத்தை எட்டியது.
அதன் பின்னர் இலங்கையின் இரண்டு பெரிய இருதரப்பு கடன் வழங்குநர்களை பாரிஸ் கிளப் அதிகாரிகள் அணுகினர். பாரிஸ் கிளப் இன்னும் இரு நாடுகளிலிருந்தும் பதிலைப் பெறவில்லை என்று தகவலை வெளியிட்ட நபர் மேலும் கூறினார். சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டங்களை ஒட்டி வொஷிங்டன் சென்றுள்ள இந்திய அதிகாரிகளை பாரிஸ் கிளப் அதிகாரிகள் சந்தித்தனர். எனினும், சீன அதிகாரிகள் நேரில் முன்னிலையாகவில்லை.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பாரிஸ் கிளப்புடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் ஈடுபடுவதற்கு யார் முதல் அடியை எடுக்க வேண்டும் என்பதில் இந்தியாவும் சீனாவும் முரண்படக்கூடும் என்று அந்த நபர் மேலும் கூறினார். பரந்த அளவிலான இருதரப்புக் கடன் வழங்குநர்களுக்கு இலங்கை 14 பில்லியன் அமெரிக்க டொலர் கடன்பட்டுள்ளது. இதில் 66% பாரிஸ் கிளப் அல்லாத உறுப்பினர்களுக்கு செலுத்த வேண்டியுள்ளது என்று இலங்கை அரசாங்க தரவுகள் தெரிவிப்பதாக ரோய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.