இலங்கையில் நிலவும் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ஆதரவு வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்துவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவொன்றினூடாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டில் ஆரம்ப நிலை சுகாதார சேவைகளை தொடருவதற்கு தேவையான ஆதரவை வழங்குவது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் கவனம் செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள உலக சுகாதார ஸ்தாபன தலைமையகத்தில் நடைபெற்றுவரும் உலக சுகாதார மாநாட்டின் போது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அசேல குணவர்த்தன தலைமையிலான குழுவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.