இலங்கையில், பறவைகள் இடம் பெயர்தல் ஆய்வுகளில் ஒரு முக்கிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது. இலங்கை களப்பறவையியல் குழுவின் ஜி.பி.எஸ். குறியிடப்பட்ட ஒரு பறவை ஹியூக்லின்ஸ் கல்ஸ் (‘மெனிகே’) எனப் பெயரிடப்பட்டது முழு இடம்பெயர்வு சுழற்சியை (இலங்கை முதல் ஐரோப்பிய ஆர்க்டிக் சுற்றுப்பயணம் 19ஆயிரத்து 360 கி.மீ.) முடித்து விட்டு மீண்டும் மன்னாருக்கு வந்தடைந்தது. பேராசிரியர் சம்பத் செனவிரத்ன மற்றும் கயோமினி பனாகொட தலைமையிலான குழுவினரால் கடந்த ஏப்ரல் மாதம் மன்னார் தீவின் தலைமன்னாரில் ஜி.பி. எஸ், குறியிடப்பட்ட பறவையான ஹியூக்ளின்ஸ் கிளில் ஒன்று (‘மேகா) விடுவிக்கப்பட்டு அது வடக்கே புறப்பட்டது. மற்றப்பறவை (மெனிகே) மேலும் 20 நாள்கள் தங்கியிருந்து ஏப்ரல் பிற்பகுதியில் மன்னாரைவிட்டு வெளியேறியது. ரஷ்யாவின் வடக்குப் பகுதிவரை பயணித்த மேகா. முதலில் ஆர்க்டிக் பகுதியின் யமல் தீபகற்பத்தில் தனது இனப்பெருக்கத் தளத்துக்கு மே மாதத்தின் நடுப்பகுதியில் சென்றடைந்தது. மெனிகே விரைவில் மேகாவை பின்தொடர்ந்து சற்று வித்தியாசமான பாதையில் யமல் தீபகற்பத்தைச் சென்றடைந்தது. மெனிகே யூரல் மலைகளைக் கடந்து, ஐரோப்பிய – ரஷ்யாவுக்கூடாக யமல் தீபகற்பத்தில் கூடுகட்டும் இடத்தைச் சென்றடைந்தது.
ஆர்க்டிக் கோடையில் ஓகஸ்ட் பிற்பகுதிவரை அங்கேயே தங்கியிருந்த மெனிகே முதலில் திரும்பி, தெற்கு நோக்கி இடம்பெயர்ந்தது. மேகா தனது தெற்கு நோக்கிய பயணத்தைச் சற்று தாமதமாக ஒக்ரோபர் தொடக்கத்தில் ஆரம்பித்தது. சீக்கிரம் புறப்பட்ட மெனிகே, இலங்கையில் இருந்து புறப்பட்டு ஆறு மாதங்கள் மற்றும் ஒன்பது நாள்களுக்குப் பிறகு நவம்பர் நான்காம் திகதி தனது குளிர்கால இடமான மன்னாரை முதலில் வந்தடைந்தது. மெனிகேயினது பாதுகாப்பான வருகையுடன், முழு இடம்பெயர்வுச் சுழற்சியை நிறைவு செய்யும் எங்களின் முதல் குறியிடப்பட்ட பறவையாக மெனிகே ஆகிறது. இலங்கையிலிருந்து ஐரோப்பிய ஆர்க்டிக் பகுதிக்கு பயணித்த முதல் (அறியப்பட்ட) பறவையும் இதுவே. இந்தக் காவியப் பயணத்தின்போது மெனிகே கடந்து வந்த நேரம் மற்றும் தூரங்கள் பின்வருமாறு. எண்ணாயிரம் கிலோமீற்றர் (7.880 கி.மீ.) தூரத்தைக் கடக்க மெனிகே தனது வடக்குப் பயணத்துக்காக மொத்தம் 35 நாள்கள் (5 வாரங்கள்) செலவிட்டது. மெனிகேயினது தெற்குப் பயணம் மெதுவாக இருந்தது. அது 91 நாள்கள் (13 வாரங்கள்) வரை நீடித்தது. இதன்போது மெனிகே பதினொன்றாயிரம் கிலோமீற்றர் (11,480 கி.மீ.) தூரத்தை முடித்தது. மன்னாரிலிருந்து ஆர்க்டிக் மற்றும் மீண்டும் மன்னார் வரையிலான தனது முழு புலம்பெயர்ந்த பயணத்தின்போது மெனிகே கடந்து வந்த மொத்ததூரம் கிட்டத்தட்ட 20 ஆயிரம் கிலோ மீற்றராகும். மேகாவும் தற்போது தெற்குநோக்கி நகர்வதற்கான இறுதி கட்டத்தில் உள்ளது. ஹியூக்லின் கல்ஸ் என்பது ஒரு பெரிய வெள்ளைத் தலை கொண்ட கல்ஸ் ஆகும். இது இலங்கையின் வடமேற்கு மற்றும் வடக்கு கரையோரப் பகுதிகளில், புலம்பெயர் பருவத்தில் மட்டுமே காணப்படுகிறது. இது லெஸ்ஸர் பேக்பேக்டு கல்ஸ் (லாரஸ் பஸ்கஸ்) வளாகத்தில் உறுப்பினராக உள்ளது. இதில் ஐந்து ஒத்த தோற்றமுள்ள கல்ஸ்கள் உள்ளன. தெற்காசிய குளிர்கால லாரஸ் பஸ்கஸ் கல்ஸின் இடம்பெயர்வு மற்றும் இனப்பெருக்கம் ஆகியவை நன்கு புரிந்து கொள்ளப்படவில்லை. மனிகே, மேகா இரண்டும் தெற்காசியாவில் முதன்முதலில் குறியிடப்பட்ட பெரிய கல்ஸ்கள். எனவே, இந்த இனங்களின் அறியப்படாத இடம்பெயர்ந்த நடத்தையைப் புரிந்துகொள்வதில் அவை வழங்கும் மகத்தான தரவு விலைமதிப்பற்றதாக இருக்கும்.
இந்த ஆய்வு, பேராசிரியர் சம்பத் செனவிரத்னவால் (முதன்மை புலனாய்வாளர்) வழிநடத்தப்படும் ஒரு கூட்டு ஆய்வாகும். அதே நேரத்தில் கயோமினி பனாகொட இந்த திட்டத்தின்கீழ் தனது கலாநிதி படிப்பை மேற்கொண்டு முக்கிய துணை ஆராய்ச்சியாளராகப் பணியாற்றுகிறார். இந்த ஆய்வில், கொழும்பு பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறையின் இலங்கையின் களப் பறவையியல் குழு மற்றும் சீன அறிவியல் அக்கடமியின் சுற்றுச்சூழல் அறிவியல் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொழில்நுட்பக் கூட்டாண்மை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஆராய்ச்சிக்காக முதன்மையாக பல்மைராஹவுஸ் (பிரைவேட்) லிமிட்டெட் மற்றும் மன்னார் வாயு ரிசார்ட் ஆகியவற்றால் நிதியளிக்கப்படுகிறது. இந்த ஆய்வில், சர்வதேச ஈரநிலங்கள் அமைப்பு பங்குதாரராக உள்ளது. மேலும் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் மற்றும் இலங்கை கடற்படை ஆகியவை அனுமதிப்பத்திரங்கள் மற்றும் தளஅனுமதி மூலம் உதவிகளை வழங்குகின்றன.