உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாரிகளான இன்ஷாப் அஹமட் மற்றும் இல்ஹாம் அஹமட் ஆகியோரின் தந்தை உள்ளிட்ட 3 பிரதிவாதிகளுக்கு எதிராக, சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் குறித்த வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது, எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதி விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் அறிந்தும், அது குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்காமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், தெமட்டகொடை பகுதியை சேர்ந்த பிரபல கோடீஸ்வர வர்தகரான மொஹமட் இப்ராஹிம் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் குற்றவியல் தண்டனை சட்டக்கோவைக்கு அமைய இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். இன்றையதினம் சந்தேகநபர்கள் கொழும்பு மேல்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.