ரஷ்ய உக்ரைன் யுத்தம் 12 நாட்களைக் கடந்த நிலையில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி , நேட்டோ நாடுகளுடன் இணையும் தங்களின் நீண்டகால விருப்பத்தை துறந்துள்ளதாக முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஸ்யா, அந்நாட்டின் மீது கடந்த 24 ஆம் திகதி தாக்குதலைத்தொடங்கியது. இதற்கெதிராக உக்ரேனும் ரஷ்யப் படைகள் மீது பதில் தாக்குதல் நடத்தி வருகின்றது. இதனால் அதிக உயிரிழப்புக்களும், பெரும் பொருட்சேதங்களும் ஏற்பட்டு வருகின்ற நிலையில், உக்ரேன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) திடீரென இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
“நேட்டோ நாடுகள் அமைப்பில் சேரவேண்டும் என்று உக்ரேன் விரும்பியது. ஆனால் நேட்டோ, அதனை விரும்பவில்லை என்பதை இப்போதுதான் புரிந்து கொள்கிறோம்”.
Volodymyr Zelenskyy
“எனவே நேட்டோ அமைப்பில் எங்களை உறுப்பினராக சேர்த்து கொள்ளுங்கள் என்று முன்பு கூறியது போல இனியும் நேட்டோ நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க போவதில்லை. இனி நேட்டோ நாடுகள் அமைப்பில் சேர நாங்கள் விரும்ப வில்லை. மண்டியிட்டு எதையாவது தானமாக பெறும் நாட்டின் ஜனாதிபதியாக இருக்க நான் விரும்பவில்லை” என்றும் தெரிவித்தார்.
‘ரஷ்ய அரசாங்கம் உக்ரேனில் உள்ள 2 பிரிவினை கோரும் பகுதிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்கி உள்ளார். அந்தப் பகுதி பிரிவினைக் குழுக்கள் தொடர்ந்து எங்களுடன் போரிட்டு வருகிறார்கள். ஆனால் அங்கு வசிக்கும் மக்களோ உக்ரேனின் ஒரு பகுதியாக வாழவே ஆசைப்படுகிறார்கள். ரஷ்யாவை தவிர வேறுயாரும் இதனை அங்கீகரிக்கவில்லை. அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பாக வாழும் உரிமையும் அந்தஸ்துக்குமான உத்தரவாதம் வேண்டும். இது குறித்து ரஷ்ய அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்த உக்ரேன் தயாராக உள்ளது. பேச்சுவார்த்தை மூலம் இப் பிரச்சினைக்குத் தீர்வு காண ரஷ்ய ஜனாதிபதி புடின் முன்வரவேண்டும்” என்றும் உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அவரது இந்த புதிய நிலைப்பாடு, உக்ரேன் – ரஸ்ய யுத்தத்தின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தகூடிய மிக முக்கிய அறிவிப்பாக அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது.