உக்ரைனின் தெற்கு துறைமுகமான ஒடேசாவில் இருந்து முதலாவது தானிய கப்பல் நேற்று புறப்பட்டு சென்றுள்ளதாக துருக்கி மற்றும் உக்ரைன் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த கப்பல் 26,000 டொன் சோளத்துடன் பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும் அவ்வதிகரிகள் மேலும் தகவல் தெரிவித்துள்ளனர். உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா ஆக்கிரமிப்பு யுத்தத்தை கடந்த பெப்ரவரி மாதம் ஆரம்பித்தது. அதிலிருந்து கருங்கடல் பிராந்தியத்தில் உள்ள உக்ரைனிய துறைமுக ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கு ரஷ்யா தடை விதித்திருந்தது.
இந்த நிலையில், தற்போது இரு தரப்பினருக்கும் இடையே இணக்கப்பாடு எட்டியுள்ள நிலையில், உக்ரைனின் ஏற்றுமதி செயல்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து சர்வதேச ரீதியாக தானியங்களின் விலையில் குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில் வீழ்ச்சி ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள ஏற்றுமதி தொடர்பான இணக்கப்பாட்டினை, ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்ரோனியோ குட்டாரஸ் வரவேற்றுள்ளார்.
இந்த உடன்பாடு ஏற்படுவதற்கு துருக்கி ஆற்றிய பணிக்கு அவர் பாராட்டை தெரிவித்துள்ளார். இதேவேளை, உலக நாடுகளுக்கு தேவையான கோதுமையில் 16 சதவீதமானவை உக்ரைன் மற்றும் ரஷ்யாவினால் வழங்கப்படுகின்றது. அதேபோல், உலக நாடுகளுக்கு தேவையான தாவர எண்ணெய்யில் 42 சதவீதமானவை, உக்ரைனினால் வழங்கப்படுவதாக ஐக்கிய நாடுகளின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.