ரஷ்யாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் தனது கிடைத்த நோபல் தங்க பதக்கத்தை விற்று உக்ரைன் போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உணவுக்காக நிதியுதவி வழங்கியுள்ளார். கடந்த ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் டிமிட்ரி முரடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசுடன் 5 லட்சம் டொலரும் பரிசாக வழங்கப்பட்டது. பரிசுத் தொகையாக கிடைத்த 5 லட்சம் டொலரை யுனிசெப் அமைப்புக்கு வழங்க அவர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்தநிலையில் ரிடேஜ் எனும் நிறுவனத்தால் நியூயோர்க்கில் நடந்த ஏலத்தில் அவரின் நோபல் பரிசு 103 மில்லியன் டொலருக்கு ஏலம் போனது. இந்தத் தொகை முழுவதும் உக்ரைனில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவதற்காக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான நிறுவனமான ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்துக்கு பத்திரிகையாளர் மிட்ரி முராடோவ் வழங்கியுள்ளார். இதற்கு உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினரும் தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.