ரஷ்யாவின் படையெடுப்பினை எதிர்கொள்ளும் துணிச்சல் மற்றும் தைரியத்திற்காக, உக்ரைன் ஜனாதிபதி வோலோ டிமிர் ஜெலென்ஸ்கிக்கு, மிக உயர்ந்த அரச விருதினை வழங்குவதற்கு செக் குடியரசு முடிவு செய்துள்ளதாக, அந்த நாட்டு ஜனாதிபதி மிலோஸ் ஜெமான் தெரிவித்தார்.
ஒக்ரோபர் மாத இறுதியில், செக் குடியரசின் அரச விருது வழங்கும் விழா நடை பெறும்போது உக்ரைன் ஜனாதிபதிக்கு இந்த விருது வழங்கப்படலாமென்றும் கூறப்படுகின்றது. மிலோஸ் ஜெமான் செக் குடியரசின் ஜனாதிபதியாக 2013 இல் பதவியேற்றதிலிருந்து, ரஷ்யாவுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளார். ஆனால், பெப்ரவரி 24 ஆம் திகதி உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஆரம்பமானதிலிருந்து ஜனாதிபதி புட்டினை அவர் கடுமையாக விமர்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.