உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்காவிட்டால் புடினை சந்திக்க தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் பைடன் கூறியதாக வெள்ளை மாளிகை வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான உக்ரைன் வட ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பான நேட்டோவில் இணைவதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது தெரிந்ததே, ஆனால், அமெரிக்கா, போன்ற நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியம் போன்றவையும் இதற்கு ஆதரவு தெரிவித்து நிற்கின்றன,
உக்ரைனை நேட்டோவில் இணைப்பதன் மூலம் அமெரிக்கா அங்கு தனது படைகளை நிரந்தரமாக நிறுத்தினால் ரஷ்யா வினது பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் என்று ரஷ்யா கருதுவதால் உக்ரைன் நேட்டோவில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிற்கிறது. மேலும், அமெரிக்காவை அச்சுறுத்தும் வகையில் ஏறக்குறைய 1.90 லட்சம் வீரர்களை உக்ரைன் எல்லையில் நிறுத்தி வைத்துள்ளது.
இந்நிலையில், வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி விடுத்த அறிக்கையில், “உக்ரைனுக்குள் ரஷ்ய துருப்புக்கள் ஊடுருவாத வரையில் மட்டுமே அமெரிக்கா தூதரக அளவிலான பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கும்” என்றும், அமெரிக்கா, ரஷ்யா வெளியுறவு அமைச்சர்கள் இந்த வார இறுதியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் என்றும்,இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் பைடன் கொள்கை ரீதியில் ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேச இருக்கிறார்,என்றும் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அண்டனி பிளிங்கன் கூறுகையில், “உக்ரைன் மீதான போரைத் தடுக்க அதிபர் பைடன் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் அதிபர் புடினை சந்திக்க தயாராக உள்ளார், மேலும் இது குறித்து வலியுறுத்தவே ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை ஐரோப்பாவில் இந்த வார இறுதியில் தாம் சந்திக்க தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அமெரிக்க உள்துறை அமைச்சர் லாய்ட் ஆஸ்டின், “உக்ரைனுக்கு அமெரிக்கா படைகளை அனுப்புவதில்லை என்பதில் அமெரிக்க அதிபர் பைடன் உறுதியாக இருக்கிறார். அதே நேரம், அமெரிக்காவானது போலந்து, போன்றவற்றின் படைகளை பாதுகாக்க எவ்வித நடவடிக்கைக்கும் தயாராக இருக்கும் என்றும், ரஷ்யா போரைத் தொடங்கும் பட்சத்தில், அது சந்திக்கும் விளைவுகள் பயங்கரமானதாக இருக்கும்,’’ என்றும் கூறினார்.
ஆனால், ரஷ்யா பெலாரஸ் எல்லையில் 30,000 படைவீர்களை கொண்டு ராணுவ பயிற்சியில் நேற்று முன்தினம் ஈடுபட்டிருந்ததானது. இது அமெரிக்கா கூறியது போல், ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்க ஆயத்தமாகி வருவதைக் காட்டுகிறது எனலாம். இதேவேளை உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டமில்லை என மறுத்து வரும் ரஷ்யா, அதே நேரத்தில் தொடர் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதனால், போர் பதற்றம் நீடித்த நிலையில், உக்ரைனில் இருந்து ரஷ்யாவுக்குள் ஊடுருவ முயன்ற 5 நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்திருக்கிறது . ஆனால், உக்ரைன் இதனை மறுத்துள்ளது.