நமது ஒட்டுமொத்த நல்வாழ்விற்கு ஆரோக்கியமான உடலைப் பராமரிப்பது முக்கியம். இரும்புச்சத்து குறைபாடு என்பது உடலில் இரத்த சிவப்பணுக்கள் இல்லாததை குறிக்கிறது, இதன் காரணமாக ஹீமோகுளோபின் குறைபாடு ஏற்படுகிறது. இரும்புச்சத்து நம் உடலுக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்தாகும். இது நமது உடல் முழுவதும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்ல உதவுகிறது. எனவே இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டால் நமது உடல் ஆரோக்கியம் பாதிக்கும். ஆனால் இரும்புச்சத்து குறைபாடு மிகவும் பொதுவானது, குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய், கர்ப்ப காலங்களில் இந்த பிரச்சனை ஏற்படும். இரும்புச்சத்து குறைபாட்டின் மிகவும் பொதுவான அறிகுறிகள் சோர்வு, மாதவிடாய் தாமதம், மார்பு வலி, மூச்சுத் திணறல், தலைச்சுற்றல் போன்றவையாகும். நமது அன்றாட உணவில் கவனம் செலுத்தினாலே இந்த பிரச்சனையில் இருந்து மீள முடியும்.
பட்டாணி :பட்டாணியில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. தினமும் பட்டாணியை உணவில் சேர்த்து கொள்வதால் நமது உடலுக்குத் தேவையான 26-29% இரும்புச்சத்தை நாம் பெற முடியும். எனவே உங்கள் உணவில் பட்டாணியை தவறாமல் சேர்த்துக் கொள்வதன் மூலம் உங்கள் இரும்புச்சத்து குறைபாடு பிரச்சனைகளை தீர்க்க முடியும்.
சிவப்பு இறைச்சி :ஆடு, பன்றி இறைச்சி, கல்லீரல், கோழி, வான்கோழி போன்ற பல்வேறு வகையான இறைச்சியில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. கல்லீரலில் குறிப்பாக இரும்புச் சத்து அதிகம் உள்ளது. ஒரு நாளைக்கு தேவையான 36% இரும்புச்சத்து உள்ளது. முட்டை, மீன் போன்ற பிற உணவுப் பொருட்களிலும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.
வெல்லம் :உங்கள் தினசரி இரும்பு சத்து தேவைகளைப் பூர்த்தி செய்ய வெல்லம் போதுமானது. எனவே தினமும் உங்கள் அன்றாட உணவில் வழக்கமான வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேர்த்து சாப்பிடலாம்.
நெல்லிக்காய் :நெல்லிக்காயில் வைட்டமின் சி, இரும்பு மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால், இரத்த சோகையை குணப்படுத்த உதவுகிறது. ஊறுகாய், மிட்டாய்கள்,ஜூஸ், நெல்லிக்காய் சாதம் என வித்தியாசமாக செய்து சாப்பிடலாம்.
ஊறவைத்த உலர் திராட்சை :பெரும்பாலான உலர் பழங்கள் இரும்புச்சத்தின் நல்ல ஆதாரங்களாகும். குறிப்பாக இரத்த அணுக்கள் உருவாவதற்கு ஊறவைத்த உலர் திராட்சைகளை சாப்பிட்டு வருவது நல்லது. எனவே தினமும் எட்டு முதல் பத்து உலர் திராட்சையை இரவில் தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் சாப்பிடுவது இரத்தத்தை பெருக்க உதவுகிறது. மேலும் பேரீச்சம்பழமும் அதிக அளவில் இரும்புச் சத்தைக் கொண்டு உள்ளது.
கீரை :கீரைகள் இரும்புச்சத்து குறைபாட்டை சரி செய்ய மட்டுமின்றி உங்கள் தசைகள் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லது. கீரைகளில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது என்பதால் வாரம் இரண்டு நாட்கள் கீரை சாப்பிடுவது நல்லது. குறிப்பாக முருங்கைக்கீரை சாப்பிடுங்கள். 100 கிராம் அரைக்கீரையில் 39 மில்லி கிராம், 100 கிராம் சிறுகீரையில் 27 மில்லி கிராம், 100 கிராம் சுண்டைக்காய் வற்றலில் 60 மில்லிகிராம் இரும்புச்சத்து உள்ளது.
காய்கறிகள் :அன்னாசிப்பழம், பிளம்ஸ், தக்காளி, அவரை, சோயாபீன்ஸ், காலிபிளவர், முருங்கைக்காய், முட்டைக்கோஸ், முள்ளங்கி, பாகற்காய், புரோக்கோலி, காரட், பீட்ரூட், பீர்க்கங்காய், பூசணிக்காய், டர்னிப் இலைகள், கடுகு இலைகள் போன்றவற்றிலும் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. கொண்டைக்கடலை, பருப்பு, பீன்ஸ் போன்ற பருப்பு வகைகளிலும் இரும்புச்சத்து அதிகம் உள்ளன.