உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம்

மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட நாவற்காடு பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் நேற்று (11)  திறக்கப்பட்டுள்ளது.

கிராமிய வீதி மற்றும் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்  மின்சக்தி எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர பிரதம அதிதியாக கலந்துகொண்டு, சூரிய சக்தி மின்நிலையத்தினை உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.

சுமார் 2.5 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சூரிய சக்தி மின்நிலையத்தின் மின் உற்பத்தி, பொது மின் வலைப்பின்னலுடன் இணைக்கப்பட்டுள்ளது.

சூரிய சக்தி மின்நிலையத்தின் ஊடாக சுமார் 200 பேர் வரை நேரடியாக தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதுடன், 10 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதுடன் 18676 சூரிய மின் கலங்கள், 47 மாற்றிகள், மற்றும் 04 ரான்ஸ்போமர்ஸ் என்பன இயங்கிவருகின்றன.

அத்தோடு 40 ஏக்கர் நிலப்பரப்பில் ஆரம்பிக்கப்பட்ட  சூரிய சக்தி மின்நிலையத்தில், மேலதிகமாக உள்ள நிலப்பரப்பில் நாட்டின் உணவுப் பாதுகாப்பு நிலையை கருத்திற்கொண்டும் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தினையும் உயர்த்தும் நோக்கில் பயிர்ச்செய்கை மேற்கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் அமைச்சரின் செயலாளர்கள், மின்சார சபை உயரதிகாரிகள், இராஜாங்க அமைச்சரின் இணைப்பு செயலாளர்கள், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், மண்முனை மேற்கு பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட மேலும் பல துறைசார் அதிகாரிகள் அதிதிகளாக கலந்துகொண்டனர்.

மேலும் இந் நிகழ்வின்போது பிரதம அதிதி உள்ளிட்ட அதிதிகளினால் பயன்தரும் மாமரக் கன்றுகள் நடப்பட்டதுடன், அருகிலுள்ள பாடசாலைக்கு பெறுமதிவாய்ந்த  கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.

Spread the love