உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை 735 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ண தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில், கைது செய்யப்பட்டவர்களுள் 196 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 493 பேர் பிணையில் விடுதலை செய்யப்ட்டுளள்னர். 81 பேருக்கு எதிராக பல் வேறு நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
79 சந்தேக நபர்களுக்கு எதிராக 27 வழக்குகள் 25, 653 குற்றச்சாட்டுகளின் கீழ் நாட்டிலுள்ள பல் வேறு மேல் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். பொலிசாரும் குற்றப்புலனாய்வு பிரிவினரும் 29 பேரை தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ண மேலும் தெரிவித்தார்.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜகத் அல்விஸ், பொலிஸ் மா அதிபர் சாந்த விக்ரமரத்ன, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மற்றும் பயங்கரவாத தடுப்புப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன அல்விஸ், அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க ஆகியோர், இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று ,இலங்கையில் இடம்பெற்ற இந்த குண்டு தாக்குதல் சம்பவத்தில் 39 வெளிநாட்டவர்கள், 3 காவல்துறையினர் உட்பட 200க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர், 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.