தென்னாபிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய வகை வைரசுக்கு அறிவியலாளர்கள் டெல்டாகுரோன் என்று பெயர் வைத்துள்ளனர். முன்பு உருமாற்றம் அடைந்த டெல்டா மற்றும் ஒமிக்ரோன் ஆகிய வைரஸ்களின் பண்புகளை ஒத்திருப்பதால் புதிய கெரோனா வைரஸிற்கு டெல்டாகுரோன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
டெல்டாகுரோனின் பாதிப்பு முதன் முறையாக மத்திய கிழக்கு நாடான சைப்ரஸில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.டெல்டாகுரோன் வைரஸை உறுதி செய்துள்ள சைப்ரஸ் நாட்டின் சுகாதார அமைச்சர் மிக்காலிஸ், தற்போதைய சூழலில் டெல்டாகுரோன் குறித்து மக்கள் பதற்றப்பட தேவையில்லை என்றும், புதிய வைரஸ் தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
அந்நாட்டில், கொரோனா பாதித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களிடம் இருந்து 11 மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுதவிர்த்து, 14 மாதிரிகள் பொதுமக்களிடம் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. மொத்தம் எடுக்கப்பட்ட 25 மாதிரிகளில் 10ல் ஒமிக்ரோன் திரிபுகள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது என சைப்ரஸ் மெயில் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.