ஜெனீவாவில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கைத் தூதுக்குழுவை வழிநடத்திச் செல்லும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இலங்கை தொடர்பான விவகாரத்தில் மேலும் கால அவகாசம் கோருவார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மோசமான பொருளாதார நெருக்கடியில் நாடு சிக்கியுள்ள நிலையில் இக் கோரிக்கை முன்வைக்கப்படுமெனவும் ஜனாதிபதி விக்ரமசிங்கவின் அரசாங்கம் இலங்கை தொடர்பான பிரச்சினைகளை விரைவில் முடிவுக்கு கொண்டுவரு மென்று அவர் பேரவைக்கு தெரிவிப்பார் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
அத்துடன் அரசாங்கம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்கும் என்பது குறித்தும் தனது பிரதான உரையில் அவர் அறிவிக்கவுள்ளார். இதேவேளை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உயர் ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட் 16 பக்க அறிக்கையொன்றை கடந்த வாரம் வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் பொருளாதார குற்றங்களும் அவற்றுடன் அதிகார துஷ்பிரயோகத்திற்கான தொடர்பு பற்றியும் அவர் குறிப்பிட்டிருந்தார். உயர் ஸ்தானிகரின் அறிக்கைகளில் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து அடிக்கடி கவலைகள் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதுபோன்ற குறிப்புகள் இருப்பது இதுவே முதல் முறையாகும்.
ஊழல், அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட பொருளாதாரக் குற்றங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்ற பொது மக்களின் கோரிக்கைக்கு புதிய நிர்வாகம் பதிலளிக்குமென உயர்ஸ்தானிகர் நம்புகிறார். நாடு பேரழிவுகரமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கின்றமை மக்களின் வாழ்க்கையை கடுமையாக பாதிக்கிறது. இந்நிலையில் இலங்கையை மீட்பதற்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்க வேண்டுமென உயர்ஸ்தானிகர் வலியுறுத்தியுள்ளார். ஆயினும், நிலையான முன்னேற்றத்திற்கு, கடந்தகால மற்றும் தற்போதைய மனித உரிமை மீறல்கள், பொருளாதார குற்றங்கள், ஊழல்களுக்கு உட்பொதிந்தித்திருக்கும் தண்டனை விலக்கீடு உட்பட, நெருக்கடிக்கு பங்களித்திருக்கும் அடிப்படை காரணிகளை அடையாளம் கண்டு, உதவுவது இன்றியமையாததாகுமெனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் ஜனநாயகரீதியான பரிசீலனைகள், சமநிலைகளை வலுப்படுத்தவும் நிறுவனங்களின் சுதந்திரத்தை மீட்டெடுக்கவும் ஆழமான கட்டமைப்பு, அரசியலமைப்பு மற்றும் அரசியல் மறுசீரமைப்புகளை இலங்கை மேற்கொண்டால் சர்வதேச சமூகத்தின் ஆதரவு அர்த்தமுள்ளதும் நிலையானதுமான தாக்கத்தை ஏற்படுத்துமென்பதும் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை மனித உரிமைகள் பேரவை முன்னேற்றங்களை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டுமெனவும் மக்களுக்கு நீதியை உறுதிப்படுத்துவது தொடர்பாக தேசிய மட்டத்தில் உறுதியான முடிவுகள் இல்லாத நிலையில், உறுப்பு நாடுகள் நீதி, மனித உரிமை மீறல்கள், ஊழல், பொறுப்புக்கூறல் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை தொடர்பாக முழுமையான சர்வதேச உபாயங்களை தொடர்ந்து பின்பற்ற வேண்டுமெனவும் இதற்கான பயணத்தில் இலங்கை மக்களுடன் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் தொடர்ந்து துணை நிற்குமெனவும் உயர் ஸ்தானிகர் குறிப்பிட்டிருந்தார்.