அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இவ்வாண்டு வெப்பநிலை வரலாறு காணாத அளவிற்கு குறைந்து, எதிர்பாராத பனி மழை, பனிக்காற்று மற்றும் சூறாவளி ஏற்பட்டு மக்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கனடா மற்றும் அமெரிக்காவில் ஏற்பட்ட மிகக்குறைந்த வெப்பநிலை காரணமாக பாய்ந்தோடி வீழ்ந்து கொண்டிருந்த நயாகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதி நின்று போனது. நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதி அப்படியே உறைந்துபோய் நின்றுவிட்டது. சுமார் 170 அடிக்கு கொட்டிக்கொண்டிருந்த தண்ணீர் உறைந்து போனதைக் காண்பிக்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் ஒன்லைனில் அதிவேகமாகப் பரவி வருகிறது.
வழக்கமாக நயாகரா நீர்வீழ்ச்சியின் உட்புறமும் வெளிப்பகுதியும் பனிப்படலமாக மாறுவது வழக்கம். ஆனால், இதுவரை ஒட்டுமொத்தமாக உறைபனியாகிவிட்டது அரிதுதான். இதற்கு முன்பு, 1848 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த நயாகரா நீர்வீழ்ச்சி முற்றிலும் உறைந்து போனதாக ஆவணங்களில் தகவல்கள் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நயாகரா ஒரு ஆற்றின் பெயர்! ஆற்றின் பெயரே அருவிக்கும் வழங்கப்படுகிறது. இந்த ஆறு கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் சென்று வடக்காகத் திரும்பி ஓடிக் கொண்டிருக்கிறது.
இதன் மேற்குக் கரையில் கனடாவும் கிழக்குக் கரையில் அமெரிக்காவும் உள்ளது. கனடாவையும் அமெரிக்காவையும் பிரிக்கும் எல்லையாக நயாகரா உள்ளது. உலகில் வேறு எங்கும் இத்தகைய பேரெழிலைக் காண முடியாது என்று அமெரிக்கர்கள் பெருமிதம் கொள்ளும் நயாகரா நீர்வீழ்ச்சி, உறைபனி காரணமாக பகுதியாக உறைந்துபோயிருக்கிறது. இந்த பிரம்மாண்டமான அருவியின் பேரழகைக் காண்பதெற்கென்றே கோடான கோடி மக்கள் ஆண்டுதோறும் அங்கு சென்று குவிகிறார்கள்.