ஐரோப்பாவுக்கான ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதியை மூன்றில் இரண்டு பங்காக குறைக்கும் திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் நேற்று முன்தினம் உடன்பட்ட நிலையில், உலக சந்தையில் எண்ணெய் விலை நேற்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்புக்குப் பின்னர் எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் தொடர்ந்தும் உயர்ந்து வரும் நிலையில், நேற்று புதிய விலையேற்றம் பதிவாகியுள்ளது. நேற்றைய நிலவரப்படி, ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 123 டொலரை தாண்டியுள்ளது.
இந்த விலையேற்றம் இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்கான அதிக விலை உயர்வாகும். இன்றைய புதிய விலையேற்றத்தால் நுகர்வோர் மீது புதிய அழுத்தம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெயில் ரஷ்யா 27 வீதத்தையும் அதே போல எரிவாயுவில் 40 வீதத்தையும் பிடித்து வருகிறது.
இந்த இறக்குமதிகளுக்காக ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவிற்கு வருடாந்தம் சுமார் 400 பில்லியன் யூரோவை செலுத்தும் நிலையில் இந்தப் பணம் உக்ரைன் மீதான போருக்கு செல்கிறது. இதனால் ஐரோப்பிய ஒன்றியத்தலைவர்களால் ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கும் தடை விதிக்க முயல்வது குறிப்பிடத்தக்கது.