உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை முடக்குவதை தவிர்க்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு

2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை முடக்குவதை தவிர்க்குமாறு நிதி அமைச்சின் செயலாளர், நிதி அமைச்சர், சட்டமா அதிபர் ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதியளித்து, உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

உயர் நீதிமன்ற நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, ஜனக்க டி சில்வா, பிரியந்த ஜயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரச அச்சகருக்கு நிதி விடுவிக்காதிருப்பதை தடுக்கும் வகையில், மற்றுமொரு  இடைக்கால தடையையும் உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.மனு மீதான விசாரணை மே மாதம் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 

Spread the love