ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டின் மீது வெள்ளை வானில் வந்த குழுவொன்றினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று திங்கட்கிழமை அதிகாலை 2.10 மணியளவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதில் வீட்டின் யன்னல்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிகாலை 2.10 மணியளவில் பிலியந்தலை, வேவல பிரதேசத்தில் உள்ள தனது வீட்டுக்கு வெள்ளை வானில் வந்த குழுவினர், வீட்டின் பிரதான வாயிற்கதவில் காவலுக்கு இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரின் தலையில் துப்பாக்கியை வைத்து அவரை அச்சுறுத்தி, பலவந்தமாக வாயிற்கதவை திறந்துகொண்டு உள்ளே வந்துள்ளதாக ஊடகவியலாளர் சமுடித சமரவிக்ரம தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்தியவர்கள் தங்கள் முகத்தை முழுவதுமாக மூடிக் கொண்டு உள்ளே நுழைந்தது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.
இதன்போது அவர்கள் வீட்டின் மீது கற்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளதுடன், முட்டியொன்றில் கொண்டு வந்த அசுத்த நீரையும் வீட்டின் மீது வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை இந்த சம்பவத்தின் போது அந்த இடத்தில் பல தடவைகள் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக சமுடித சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தப் பகுதிக்கு சென்ற பொலிஸார் சிசிரிவி பதிவுகளை வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். பிரபல தனியார் ஊடகத்தில் அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை நடத்திவரும் சமுடித சமரவிக்ரமவுக்கு இதற்கு முன்னர் பல தடவைகள் தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வந்த நிலையிலேயே நேற்று அவரின் வீட்டின்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை துரிதப்படுத்துமாறு ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும, பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.