ஊழியர் பற்றாக்குறை காரணமாக தற்போது ரயில் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை சேவையில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக போக்குவரத்து துறைசார் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதனால் நாளாந்த ரயில் சேவைகள் சில இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.
சாரதிகள் மற்றும் நடத்துநர்களின் பற்றாக்குறையால் இலங்கை போக்குவரத்து சபையினூடாக அதிகபட்ச சேவையை வழங்குவதிலும் இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால் தமது நாளாந்த பொதுப்போக்குவரத்தை பயன்படுத்த முடியாத பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் M.M.P.K.மாயாதுன்னேவிடம் வினவிய போது, ரயில் சாரதிகளின் பற்றாக்குறையை நிவர்த்திப்பதற்கு ஓய்வு பெற்ற சாரதிகளை ஒப்பந்த அடிப்படையில் சேவையில் இணைத்துக்கொள்ளபொதுச் சேவை ஆணைக்குழு நேற்று (07) அனுமதி வழங்கியதாகக் கூறினார். திணைக்களத்தின் கனிஷ்ட ஊழியர்களுக்குரிய அரச பொருளாதார செயலணிக்காக 2800 பேர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
இதனிடையே, இலங்கை போக்குவரத்து சபைக்கான சாரதிகள் மற்றும் நடத்துநர்களை ஒப்பந்த அடிப்படையில் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை இலங்கை போக்குவரத்து சபைக்கு சேவையில் இணைத்துக்கொள்ள நிதி அமைச்சிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.