எதிர்வரும் மே மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ள இலங்கை – இந்தியா இடையிலான கப்பல் சேவை

இந்தியாவின் பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் – யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைக்கு இடையிலான கப்பல் சேவை எதிர்வரும் மே மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்தியாவின் காரைக்கால் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறைக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை எதிர்வரும் மே மாதம் நடுப்பகுதியில் ஆரம்பிக்கவுள்ளதாக IndSri Ferry Service நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார்.

இலங்கை – இந்தியா இடையிலான கப்பல் சேவையின் பயண மார்க்கம் என்ன?

இந்த கப்பல் சேவை இந்தியாவின் புதுச்சேரி காரைக்காலிலிருந்து யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை வரை முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த கப்பல் சேவை எப்போது ஆரம்பிக்கப்படவுள்ளது?

காரைக்கால் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவையை எதிர்வரும் மே மாத நடுப் பகுதியிலிருந்து ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக IndSri Ferry Service நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார்.

பயணக் கட்டணம்?

ஒரு வழி போக்குவரத்திற்கு 50 அமெரிக்க டொலர் அறவிடப்படுவதாக IndSri Ferry Service நிறுவனம் குறிப்பிடுகின்றது.

பயண நேரம்?

65 கடல் மைல் தூரம் கொண்ட இந்த பயணத்திற்கு சுமார் 4 மணித்தியாலங்கள் தேவைப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை தொடக்கம் சனிக்கிழமை வரை காலை 8 மணிக்கு காரைக்காலில் பயணத்தை ஆரம்பிக்கும் கப்பல் நண்பகல் 12 மணிக்கு காங்கேசன்துறையை வந்தடையவுள்ளதுடன், மீண்டும் காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 2 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கும் கப்பல் மாலை 6 மணிக்கு காரைக்காலை சென்றடையும்.

இந்த கப்பலில் எத்தனை பயணிகள் செல்ல முடியும்? பயணி ஒருவர் எத்தனை கிலோகிராம் எடுத்து ​செல்ல முடியும்?

இந்த கப்பலில் 120 – 150 பயணிகள் வரை ஒரு தடவையில் பயணிக்க முடியும் என்பதுடன் ஒரு பயணி 100 கிலோகிராம் பொருட்கள் கொண்டுசெல்ல முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கப்பலில் 6 ஊழியர்கள் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே, இந்த கப்பல் சேவை ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் இந்திய அரசாங்கத்தினால் கிடைக்கப்பெறவிருந்த சில அனுமதிகள் தாமதமடைந்ததால், கப்பல் சேவையை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கப்பல் சேவைக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் பணிகளும் பாதுகாப்பு ஒழுங்குகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர், கெப்டன் கயான் விக்ரமசூரிய நியூஸ்பெஸ்ட்டிற்கு குறிப்பிட்டுள்ளார்.

source from newsfirst
Spread the love