பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேரா நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்வதை தடுத்து நிறுத்த உத்தரவிட வேண்டுமென்று கோரி தாக்கல் செய்யப்பட்ட 5 அடிப்படை உரிமை மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது உயர் நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.
அதையடுத்து அவர் இன்று நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்கவுள்ளார். சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேராவின் பெயர் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டது.
அதையடுத்து அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்வதை தடுத்து உத்தரவிடக்கோரி 5 அடிப்படை உரிமை மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அடிப்படை உரிமை மனு தொடர்பான தீர்ப்பு கிடைக்கும் வரை, நாடாளுமன்ற உறுப்பினராகவோ, அமைச்சராகவோ தாம் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளப்போவதில்லை என வர்த்தகரான தம்மிக்க பெரேரா உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் உறுதியளித்திருந்தார். இந்தநிலையில் இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலேயே உயர் நீதிமன்றம் நேற்று நிராகரித்துள்ளது.