எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய பெற்ரோல், டீசல் விலைகளை இன்று வெள்ளிக்கிழமை அதிகரிப்பதற்கு பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் திட்டமிட்டுள்ளது. இதேவேளை மண்ணெண்ணெய் விலையை பெருமளவில் அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விலை அதிகரிப்புகளுக்கமைய பெற்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 500 ரூபாவை நெருங்கவுள்ளது. எரிபொருள் கப்பல் நேற்று அதிகாலை வரவிருந்ததாகவும், ஆனால் தாமதமாகி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால் நேற்று நாடளாவிய ரீதியில் மட்டுப்படுத்தப்பட்ட பெற்றோல் விநியோகம் மேற்கொள்ளப்பட்டதுடன் இன்றும் அதே போன்றே விநியோகிக்கப்படும்.
இதேவேளை ஆட்டோ டீசல் கிடைக்கப்பெற்றதாகவும், நாடளாவிய ரீதியில் முழு கொள்ளளவிற்கு விநியோகிக்கப்படுவதாகவும் தெரிவித்த அவர் எவ்வாறாயினும், தற்போது மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே சுப்ப டீசல் விநியோகம் காணப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். எனினும் தற்போதைய எரிபொருள் வரிசையை குறைக்க இலங்கைக்கு குறைந்தது 40,000 மெட்ரிக் தொன் 92 ஒக்டேன் பெற்றோல் தேவை என தொழிற்சங்கவாதி ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார்.
கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் இன்று இடைநிறுத்தப்படலாம் எனவும் 57 நாட்கள் இலங்கை கடற்பரப்பில் இருந்த ஒரு கப்பலுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் கூடுதல் தொகை செலுத்திய பின்னரே விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். எனவே இந்த பின்னணியில் இலங்கைக்கு வரவுள்ள பெற்றோல் மற்றும் டீசல் ஏற்றுமதியை அதிகாரிகளால் இறக்குவது சாத்தியமில்லை எனவும் நாட்டு மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை அமைச்சர் நிறைவேற்றத் தவறியுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.